போயஸ் கார்டன் மாஜி கூர்க்கா, ஜந்து, டூத் பேஸ்ட் அழகன், கோகுலத்து இந்திரன்... தினகரனை வெளுத்து வாங்கிய முரசொலி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மிக கடுமையாக விமர்சித்த அமமுக துணை பொதுச்செயலர் தினகரனுக்கு முரசொலி நாளேடு அதே பாணியில் பதிலடி கொடுத்துள்ளது.

முரசொலி நாளிதழில் இன்று வெளியிடப்பட்டுள்ள கட்டுரை:

ஜெயலலிதாவை சிதைக்கும், சித்தியை சிறைக்கும் அனுப்பிவிட்ட போயஸ் கார்டன் மாஜி கூர்க்கா ஒன்று தனக்குத்தானே ‘மக்கள் செல்வர்’ என்ற நேம்போர்டு மாட்டிக் கொண்டு அலைகிறது.

புதுச்சேரியில் தனிக்குடித்தனம் போனதால் கார்டனில் இருந்து விரட்டப்பட்டு பத்தாண்டு காலம் மும்பைக்கும் சென்னைக்கும் புதுவைக்கும் பகலில் தூங்கித் திரிந்த ஜந்துவுக்கு கடந்த டிசம்பரில் அடித்தது பம்பர் பரிசு. ஜெ. செத்ததும் தானே ஜே.வாகவும் - சசி. ஜெயிலுக்குப் போனதும் தானே புதிய சித்தப்பனாகவும் வேடம் கட்டி- அந்த நக்கிப் பிழைத்த கூட்டத்துக்கு நாட்டாமை ஆகலாம் என்று கணக்குப் போட்டது.

ஜெ. கால், சசி கால் போல் தன் காலிலும் கிடப்பார்கள் என்ற நப்பாசியில் ஒரே ஒரு சோபா போட்டு உட்கார்ந்து மந்திரிகளை தன் வீட்டு மந்தியாக மாற்றத் துடித்ததில் மண் விழுந்த ஆத்திரம் தலைக்கேறி அலைகிறது அது.

‘உன்னை மெட்ராஸுக்குள் பார்த்தால் என்கவுண்டர் செய்துவிடுவேன்” என்று ஜெயலலிதா சொன்னாரா இல்லையா? சொல்.

அதன்பிறகு ‘திருவேற்காடு’ கதைகளைப் பேசுவோம். ஜெயலலிதாவை அடுத்த ரூமில் படுக்க வைத்துவிட்டு, ஒரு கோடி ரூபாய்க்கு தின்றவர்கள், உயிரோடு இருக்கும்போது எவ்வளவு தின்றாய் என்று கேட்டால் உறைக்கிறதா?

‘நான் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவன்’ என்று எழுதித் தந்தவன், மண்ணின் மைந்தன் பேசலாமா? இன்றைய அமைச்சர்களின் பணத்தால் ஆர்.கே.நகரில் வென்ற ‘டுவெண்டி’, வெற்றிக்குப் பிறகு எத்தனை தடவை ஆர்.கே.நகர் போனது?

‘நான் மறுபடியும் ஆர்.கே.நகரில்தான் போட்டியிடுவேன் என்று தினகரன் சொல்லட்டும். அரசியலில் இருந்து விலகுகிறேன்’ என்கிறாரே அமைச்சர் ஜெயக்குமார். டூத் பேஸ்ட் அழகன் ஏன் இன்னும் பதில் சொல்லவில்லை?

கருணாநிதி எம்.எல்.ஏ. ஆவதற்கு முன்பே கோபாலபுரத்தில் வீடு வாங்கிவ்ட்டார். ரூ28 கோடி அபராதம் போடும் அளவுக்கு நீ பார்த்த தொழில் என்ன?

2ஜி-ல் குற்றமற்றவர் என விடுதலைத் தீர்ப்பு வந்தது. உங்கள் வீட்டு 3 ஜிக்களும் ஜெயிலில் இருப்பது குற்றம் நிரூபிக்கப்பட்டதால்! இந்த கோகுலத்து இந்திரன் இன்னமும் வெளியில் இருப்பது தீர்ப்புகள் வராததால்!

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அவர் மரணமடைந்த நேரத்தில் இருந்தே சொல்லி வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். மர்மம் விலகினால் குடும்பம் உள்ளே போக வேண்டுமே என்ற ஆத்திரத்தில் நிதானம் தவறி தலையால் நடக்கிறது அது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெ. மரணத்தின் மர்மம் விலகும்.

’மருந்தே கொடுக்காமல்’ கொன்றவர்கள்-

‘மருந்து கொடுத்தும்’ கொன்றவர்கள்-

‘அழிக்க’ யாகம் நடத்தியவர்கள்

‘அபகரிக்க’ யாகம் நடத்தியவர்கள்

கேரளாவில் இருந்தாலும் கர்நாடகாவில் இருந்தாலும் இழுத்து வரப்பட்டு விசாரிக்கப்படுவார்கள்.

விசாரணை அடுப்பு மூட்டப்பட்டால் அயிரை மீன் என்னவாகும் என்பது அப்போது தெரியும்!

இவ்வாறு முரசொலியில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது,

More News >>