அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி திடீர் விலகல் - விசாரணை ஒத்திவைப்பு!
அயோத்தி வழக்கில் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நீதிபதி லலித் திடீரென விலகினார். இதனால் வழக்கு விசாரணை 28-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு என்பதில இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சர்ச்சை நிலவுகிறது. இதனால் உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு' விசாரணை மாற்றம் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் மூத்த நீதிபதிகள் பாப்டே, ரமணா, லலித், சந்திர சூட் ஆகியோர் கொண்ட பெஞ்ச் அமைக்கப்பட்டு இன்று முதல் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இன்று வழக்கு விசாரணை தொடங்கியவுடன் பாபர் மஸ்ஜித் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், அமர்வில் இடம் பெற்றிருக்கும் நீதிபதி லலித் பற்றிய தகவல் ஒன்றை தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்தார். 1994-ல் அயோத்தி பிரச்னையில் உ.பி.முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் தரப்புக்காக அப்போது வழக்கறிஞராக இருந்த லலித் ஆஜரானதை சுட்டிக்காட்டினார். தற்போது நீதிபதிகள் குழுவில் இடம் பெற தாம் ஆட்சேபிக்கவில்லை என்றாலும் 5 பேர் அமர்வில் இடம் பெறுவது குறித்து நீதிபதி லலித் அவராகவே முடிவு செய்யலாம் என்றார். இதைத் தொடர்ந்து அரசியல் சாசன அமர்வில் இருந்து விலகுவதாக லலித் அறிவித்தார்.
இதனால் இன்று அயோத்தி வழக்கு விசாரணை நடைபெறவில்லை. நீதிபதி லலித்துக்கு பதிலாக புதிய நீதிபதியை நியமித்த பின் வழக்கு விசாரணை இம்மாதம் 28-ந் தேதி நடைபெறும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்தார்.