டெல்லியில் டேரா போட்ட டெல்டா திவாகரன்.... அதிமுகவில் இணைய பகீரத பிரயத்தனம்
தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவை சந்தித்துப் பேசியிருக்கிறார் திவாகரன். லோக் சபா தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் அதிமுகவில் இணைவது தொடர்பாகவும்தான் சீரியஸ் விவாதம் சென்று கொண்டிருக்கிறதாம்.
டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பை பரம ரகசியமாக வைத்திருந்தார்கள்.
தினகரனுக்கு எதிராகச் செயல்படுவதால் மோடி தரப்பில் உள்ளவர்கள், திவாகரனை நம்புகிறார்கள். தஞ்சாவூர் உள்பட டெல்டா பகுதிகளில் திவாகரனுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது.
அந்த செல்வாக்கின் மூலம் ஓரிரு தொகுதிகளில் நல்ல வாக்குகளை வாங்க முடியும் எனக் கருதுகிறது பாஜக. சமீபத்தில் சென்னை வந்த மோடியின் உடன்பிறந்த சகோதரர் ஒருவர், ஜெய் ஆனந்த்தை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் தொடர்ச்சியாகத்தான் டெல்லியில் இருந்து திவாகரனுக்கு அழைப்புகள் வருகிறதாம்.
அதிமுகவில் இணைந்து செயல்படுவதுதான் திவாகரனின் முக்கிய இலக்காக இருக்கிறது.
இதற்காகக் கடந்த 2 நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருக்கிறார் திவாகரன். அவரது டெல்லி விசிட் குறித்துப் பேசும் அண்ணா திராவிடர் கழக பொறுப்பாளர்கள், ' தினகரனுக்கு எதிராகத் தனிக்கட்சி தொடங்கினாலும் அந்தக் கட்சியை சீராக நடத்திச் செல்வதற்கு திவாகரன் ஆர்வம் காட்டவில்லை. அவரது மகனும், போஸ் மக்கள் பணியகத்தைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார்.
அ.தி.கவை விடவும் போஸ் இயக்கத்தில்தான் அவர் ஆக்டிவ்வாக இருக்கிறார்.
ஆளும்கட்சியில் இணைந்து செயல்படுவதைத்தான் கட்சி நிர்வாகிகள் பலரும் விரும்புகிறார்கள். அதற்காகத்தான் திவாகரனும் காத்துக் கொண்டிருக்கிறார். எப்படிப் பார்த்தாலும் தினகரனை சாதி வட்டத்துக்குள்தான் அனைவரும் அடக்குகிறார்கள்.
அமமுகவில் இருப்பவர்களுக்கு எந்த எதிர்காலமும் இல்லை. திவாகரனிடம் பாசம் காட்டுகிறவர்களுக்கு எப்போதுமே எதிர்காலம் உண்டு. தன்னை நோக்கி வந்தவர்களைக் காப்பாற்றுவதற்காகவும் அவர் அதிமுகவில் இணைந்து செயல்பட விரும்புகிறார். அதிமுக அரசில் உள்ளவர்களிடம் கேட்பதை விட டெல்லி வாலாக்கள் மூலமாக உள்ளே வரலாம் என நினைக்கிறார். அதற்காகத்தான் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்' என்கிறார்கள்.