விஸ்வாசம் படத்திற்கு டிக்கெட் வாங்க பணம் தராததால் ஆத்திரம்: தந்தையை மண்ணெய் ஊற்றி கொளுத்திய மகன் கைது
விஸ்வாசம் படத்திற்கு டிக்கெட் வாங்க பணம் தராததால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை மண்ணெண்ணை ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே கழிஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (48). பீடி கட்டும் தொழில் செய்து வரும் இவரது மகன் அஜித் (22) மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், அஜித் விஸ்வாசம் படத்திற்கு டிக்கெட் வாங்க பணம் வேண்டும் என்று பாண்டியனிடம் கேட்டுள்ளார். அப்போது, பாண்டியன் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால், இருவருக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்னை முற்றியதால், தந்தை மீது இருந்த ஆத்திரத்தில் முதலில் கல்லைத் தூக்கி தலையில் போட்ட அஜித் பிறகு, மண்ணெண்ணை ஊற்றி கொளுத்தியுள்ளார்.
இதனால் அலறித்துடித்த பாண்டியனின் கதறும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். 40 சதவீதம் தீக்காயங்களுடன், பாண்டியன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, அஜித்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.