ராகுலுக்கு நோட்டீஸ் ...பெண்கள் ஆணையம் மீது பாய்ந்த காங்கிரஸ்!
ரபேல் விவகாரத்தில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனை காங்கிரஸ் தலைவர் விமர்சித்ததற்கு தேசிய பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு காங்கிரஸ் தரப்போ, மோடிக்கு ஒரு நியாயம்? ராகுலுக்கு ஒரு நியாயம்? என்று பெண்கள் ஆணையம் பாரபட்சமாக செயல் படுவதா? என பாய்ந்துள்ளது.
ரபேல் விவகாரத்தில் பிரதமர் மீது மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசத் தாக்குதலை தொடுத்தார். கேள்வி மேல் கேள்வி விடுத்து மோடிக்கு சவால் விட்டார். ஆனால் இதற்கெல்லாம் ராணுவ அமைச்சர் பதிலளித்ததை கிண்டலடித்தார் ராகுல் . ஒரு பெண்ணை பதிலளிக்க விட்டு மோடி ஓடி ஒளிந்து விட்டார் என்றும் ராகுல் விமர்சித்தார். ஒரு ராணுவ அமைச்சரை லேடி என்று கீழ்த்தரமாக விமர்சிப்பதா? பெண்களை மதிக்கும் நாட்டில் இது தான் ராகுல் தரும் மரியாதையா? என்று மோடி கண்டனம் தெரிவித்தார். இதற்கு பதிலடியாக, பெண்கள் மீதான மரியாதை வீட்டில் இருந்து தொடங்க வேண்டும் என்றார் ராகுல்.
இந்த சர்ச்சையில் தற்போது தேசிய பெண்கள் ஆணையமும் ராகுலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் அனுப்பிய தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மாவை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி டிவிட்டரில் வம்புக்கு இழுத்துள்ளார். 2014-ல் உன்னாவ், கத்வா வில் பெண்களுக்கு எதிராக நடந்த சம்பவங்களின் போது பெண்கள் ஆணையம் என்ன செய்தது? அந்த சம்பவத்தை விமர்சித்த பிரதமர் மோடி மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்று கேட்டுள்ளார். இதற்கு ரேகா சர்மாவோ, உன்னாவ், கத்வா சம்பவங்களுக்கும் தேசிய பெண்கள் ஆணையத்துக்கும் சம்பந்தமில்லை.
எதையும் தெரிந்து கொண்டு பேசக் கற்றுக் கொள்ள வேண்டும் என பிரியங்காவை டிவிட்டரில் பதிலுக்கு விமர்சித்தார். இதனால் காங்கிரசின் பிரியங்கா சதுர்வேதியோ ஆவேசமாகி, பெண்கள் ஆணையத்தின் வேலை நோட்டீஸ் அனுப்புவது மட்டுமே.... பொது வெளியில் விமர்சிக்க நீங்கள் என்ன அரசியல்வாதியா? என்றதுடன் நோட்டீசுக்கு தக்க பதில் வரும் என்று மீண்டும் டிவிட்டியுள்ளார். இருவரின் டிவிட்களால் ராகுல் - நிர்மலா சீதாராமன் மோதல் விவகாரம் மேலும் சூடு பிடித்துள்ளது.