10% இடஒதுக்கீடு சமூக நீதியை சாகடிக்கும் செயல் - சீமான் கண்டனம்!

முற்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது இட ஒதுக்கீட்டின் நோக்கத்தை சிதைத்து சமூக நீதியைச் சாகடிக்கும் செயல் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்ட அறிக்கை: முற்பட்ட வகுப்பினருக்கு இட எதுக்கீடு வழங்க சட்டத்திருத்தம் கொண்டு வரும் பா.ஜ.க அரசின் செயல் சமூகநீதியின் அடிநாதமான இடஒதுக்கீட்டு முறையையே அடியோடு தகர்க்கும் உள்நோக்கம் கொண்ட சதியாகும்.

பன்னெடுங்காலம் சமூகத்தின் ஆழ் தளத்தில் அழுத்தி வைக்கப்பட்டு, எவ்வித வாய்ப்புகளும் பெறாத நிலையில் இருக்கிற உழைக்கும் மக்களின் உயர்வுக்காகவே இட ஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட்டது. சாதீய ஏற்றத்தாழ்வு, தீண்டாமைக் கொடுமைகளால் பெருந்துயருக்கு ஆட்பட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட , உழைக்கும் மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் உயர்ந்தால் தான் சமூக சமத்துவத்தை அடைய முடியும் என்கிற நிலையில் தான் இட ஒதுக்கீட்டு முறையை நிலை நிறுத்தினார்கள்.

இட ஒதுக்கீடு என்பது சலுகை அல்ல. நமது சமூகத்தில் எல்லாத் தரப்பு மக்களுக்கும் எல்லா வித வாய்ப்புகளும் வசதிகளும் கிடைக்கவும், சமூகத்தை நேர் நிறுத்தவும், சமத்துவத்தை நிலை நிறுத்தவும் செய்யும் கருவியே இட ஒதுக்கீடு. இவ்வளவு காலம் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக எதிர்நிலைப்பாடு எடுத்தவர்கள் இன்று கள்ள மெளனம் சாதித்து முற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறித்து வாய் திறக்க மறுக்கிறார்கள்.பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உயர்வுக்கு அரசு 3ல் வழிகாட்டி தூக்கி விட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதற்கு இட ஒதுக்கீட்டை வழிமுறையாகக் கொள்வதை ஏற்க முடியாது. உ016-ம் ஆண்டு உலக வங்கி அறிக்கைப்படி இந்தியர்களில் 5-ல் ஒருவர் பொருளாதாரத்தில் பின்தங்கியவராக இருக்கிறார்.

இந்நிலையில் வெறும் 5% இருக்கும் பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு என்பது எவ்வகை நியாயம். மத்தியில் ஆளும் மோடி அரசின் தவறான கொள்கை, காட்டாட்சி முறைகளால் நாடு முழுக்க எழுந்துள்ள மிகப் பெரும் எதிர்ப்பலையைத் திசை திருப்பவும், இட ஒதுக்கீட்டு முறையை திசை மாற்றி ஒழித்திடவுமே இச்சதிச்செயல் அரங்கேற்றப்படுகிறது. சமூக நீதியைச் சாகடிக்கும் இப் படுபாதகச் செயலை வன்மையாக கண்டிப்பதோடு, உடனே இதனை கைவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.

More News >>