தினகரன் பாசத்தில் தம்பிதுரை! பொதுச் செயலாளர் பதவிக்கு முன்னோட்டம்?
'டிடிவி என்ன மகானா? அவர் அதிமுக உறுப்பினரே இல்லை. மறைந்த மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இருந்த காலத்தில் அவர் 10 ஆண்டுகளாக காணாமல் போய் இருந்தார். பின்னர் அவர் குறித்து எப்படி கருத்து தெரிவிக்க முடியும். நிருபர்களாகிய உங்களுக்கு பரபரப்பு செய்தி தேவைப்பட்டால் அவர் குறித்து செய்தி போட்டுக் கொள்ளுங்கள். சமீபத்தில் அ.ம.மு.க விலிருந்து வந்தவர்கள் எனது முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு அ.தி.மு.க.வில் உரிய மரியாதை அளிக்கப்பட்டது. தினகரனை தவிர அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம். அவர்கள் உரிய மரியாதையுடன் அ.தி.மு.க.வில் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள்' - தினகரன் தொடர்பான கேள்விக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறிய வார்த்தைகள் இவை.
தினகரன் தொடர்பான கேள்விகளைக் கேட்டாலே, அமைச்சர் ஜெயக்குமார் உள்பட மந்திரிகள் பலரும் இதே ஸ்டேட்மெண்ட்டைத்தான் ரெடிமேடாகப் பேசுகின்றனர். ஆனால், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை இதற்கு நேர்மாறான நிலைப்பாட்டில் இருக்கிறார். கூட்டணி குறித்து அவர் பேசிய வார்த்தைகளை பொன்.ராதாகிருஷ்ணன் விரும்பவில்லை. முடிவெடுக்க வேண்டியது எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும்தான் என விளக்கம் கொடுத்திருக்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்.
தமிழக அரசு, அதிமுக தொடர்பான கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் தம்பிதுரை, சசிகலா குடும்பம், தினகரன் தொடர்பான கேள்விகளை ஓரம்கட்டி விடுகிறார். இதற்கான காரணத்தைக் கூறும் அதிமுகவினர், ' கூவத்தூர் அரசியல் நடந்து கொண்டிருந்தபோது, சசிகலா சி.எம்மாக வாய்ப்பில்லை என்பதை அறிந்த தம்பிதுரை, டெல்லி சோர்ஸுகள் மூலமாக முயற்சி செய்தார். அதேநேரம், கேரள கவர்னர் சதாசிவம் மூலமாக எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தியது. இதில் எடப்பாடிக்கே ஜாக்பாட் அடித்தது.
இதனால் படுஅப்செட்டில் இருந்தார் தம்பிதுரை. இப்போது சில மாதங்களாக அமமுக, அதிமுக இணைப்பு பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். சசிகலா சிறையில் இருந்து வந்துவிட்டால், அதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கின்றனர். ஒருவேளை அப்படி நடந்தால், கட்சிக்கு மூத்தவர் என்ற அடிப்படையில் தன்னை பொதுச் செயலாளர் ஆக்கிவிடுவார்கள் என எதிர்பார்க்கிறார். அதற்கு முன்னோட்டமாகத்தான் தினகரன் பற்றிய கேள்விகளை வந்தால், ஜம்ப் அடிக்கிறார் தம்பிதுரை' என்கிறார்கள்.
-அருள் திலீபன்