அதிமுக பாசத்தைக் கைவிட்டுவிடக் கூடாது! கூட்டணிக் குழப்பத்தில் குமுறிய பொன்னார்
பிரதமர் மோடிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியின் கருத்தைக் கேட்காமல் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் தம்பிதுரை. தேர்தல்கால கூட்டணி தொடர்பாக அவர் பேசிய வார்த்தைகளை தமிழ்நாடு பிஜேபி விரும்பவில்லையாம்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட சாதியினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் அல்லது 5 ஹெக்டேருக்கும் குறைவாக விவசாய நிலம் உள்ளவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும். இதற்கான அரசியல் சாசன திருத்த மசோதாவை, மத்திய அமைச்சர் தாவர் சந்த் கெலாட் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.
இந்த மசோதா தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் தம்பிதுரை பங்கேற்றுப் பேசுகையில், சட்டமாகாது என தெரிந்தே உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வருவது ஏன்? பிரதமர் தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு அனைவரின் வங்கிக் கணக்கிலும், 15 லட்ச ரூபாய் போட்டிருந்தால் இடஒதுக்கீட்டுக்கான அவசியமே ஏற்பட்டிருக்காது’ என்று தெரிவித்தார். சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்குப் பின்னரும் வருணாசிரம தர்மத்தால் சூத்திரர்களாக நீடிப்பதாகவும் அவர் ஆவேசப்பட்டார்.
தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு தமிழக பிஜேபி முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், தம்பிதுரை பேசிய வார்த்தைகளால் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். ' கூட்டணி வேண்டாம் எனக் கூறுவதற்கு தம்பிதுரைக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதைப் பற்றி ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும்தான் முடிவெடுக்க வேண்டும்' என்றார். இந்தக் கருத்து பற்றிக் கூறும் விவரம் அறிந்த வட்டாரங்கள், பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைந்தாலும் அமையாவிட்டாலும் பொன்னாருக்குக் கவலையில்லை.
அவருடைய கவலை எல்லாம் மீண்டும் கன்னியாகுமரியில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான். அவரது தொகுதியில் அதிமுக ஆதரவு இந்துத்துவ வாக்குகள் கணிசமாக உள்ளன. அவர்கள் ஓட்டுப் போட்டால் 40 சதவீதத்துக்கும் மேல் பொன்னார் வாக்குகளைப் பெற்றுவிடுவார். எனவேதான் அதிமுக பாசத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் அப்படிப் பேசினார். கூட்டணி அமையாவிட்டாலும் அதிமுக மீது பாசத்தைக் காட்டுவதால் மக்கள் தமக்கு ஓட்டுப் போடுவார்கள் என நம்புகிறார். அதனால்தான் தம்பிதுரை கருத்தை அவசரம் அவசரமாக மறுத்தார்' என்கிறார் நமுட்டுச் சிரிப்போடு.