ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு - வருமான வரித்துறை அறிக்கை தாக்கல்!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த அறிக்கையை சீலிட்ட கவரில் வருமான வரித்துறை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
2017-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சித் தரப்பில் பணப் பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உட்பட 32 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை கடத்தியதில் பணப்பட்டுவாடா தொடர்பான ஏராளமான ஆவணங்கள் சிக்கின.
தொடர்ந்து தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி திமுக வேட்பாளர் மருது கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் சத்தியநாராயணா, ராஜமாணிக்கம் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரனை நடத்தியது. வருமான வரிச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும், அறிக்கையையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று வருமான வரித்துறை தரப்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களையும் சீலிட்ட கவரில் ஒப்படைத்தது. இதன் மீதான விசாரணையை 18-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.