பலத்த இழுபறிக்கு பின்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது புதிய அரசியல் சட்ட வரைவு

இலங்கையில் புதிய அரசியல்சட்டத்தைக் கொண்டு வருவதற்காக நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள வரைவு நாளை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

2015ஆம் ஆண்டு இலங்கையில் மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்ரமசிங்க கூட்டு அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், நாட்டின் அரசியல்சட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, இலங்கை நாடாளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டதுடன், புதிய அரசியல் சட்டத்துக்கான யோசனைகளைப் பெற்று அதனை தயாரிப்பதற்கான வழிநடத்தல் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

இந்த வழிநடத்தல் குழுவின் கீழ் 10 நிபுணர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, புதிய அரசியல்சட்டத்துக்கான யோசனைகளை ஒன்றிணைத்து. புதியதொரு வரைவை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. புதிய வரைவை கடந்த நவம்பர் 7ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில், அதனைத் தடுக்கும் நோக்கில், ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்றது.

எனினும், அந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்ததை அடுத்து, மீண்டும் பதவிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க அரசாங்கம், புதிய அரசியல்சட்டத்துக்கான வரைவை குறுகிய காலத்துக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கமைய, நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள, அரசியல்சட்டத்துக்கான யோசனைகளை உள்ளடக்கிய வரைவை, நாளை காலை 10.30 மணிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.

ந்த வரைவுடன், சேர்த்து மேலும் நான்கு அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இந்த அறிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதமும் நடத்தப்படவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புதிய அரசியல்சட்டத்தை விரைவாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று, அழுத்தம் கொடுத்து வருகிறது.

எனினும், அவசரமாக புதிய அரசியல்சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு, தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியிருக்கிறார். தற்போதைய அதிபர் சிறிசேனவின் தலைமையிலான, சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், அவசரமாக அரசியல்சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் அதனைத் தோற்கடிக்கவும் தயங்கமாட்டோம் என்று எச்சரித்திருக்கிறது.

இலங்கையில் புதிய அரசியல் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தற்போதைய அரசாங்கத்துக்கு இல்லை. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், அது பொதுவாக்கெடுப்பின் மூலம், அங்கீகரிக்கப்பட வேண்டும். இதனால் புதிய அரசியல்சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டாலும், அதனை நிறைவேற்றி, மக்களின் ஆணையையும் பெற்றுக் கொள்வது சிரமமான காரியமாகவே இருக்கும்.

More News >>