இந்திய பெண் விண்வெளிக்குச் செல்கிறார்: இஸ்ரோ தகவல்

மனிதர்கள் அடங்கிய விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலத்தில் பெண் விண்வெளி வீராங்கனை செல்ல இருப்பதாக இஸ்ரோ தலைவர் கே. சிவன் கூறியுள்ளார்.

2021ம் ஆண்டின் பிற்பாதியில் ககன்யான் அனுப்பப்படும் என்று நம்பப்படுகிறது. முதலில் இஸ்ரோ மற்றும் இந்திய விமானப்படையிலிருந்து நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது விமான படையிலிருந்து மட்டும் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சிவன் கூறியுள்ளார்.

பத்து வீரர்களுக்கு பயிற்சியளிக்கப்படும். பயிற்சியும் தெரிவும் ஒரே சமயத்தில் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பயிற்சியளிப்பது அல்ல; பயிற்சியளிக்கப்படுபவர்களுள் சிலர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நம் வீரர்களுக்கு பயிற்சியில் உதவ ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகள் முன்வந்துள்ளன. அனுப்பப்படும் விண்கலத்தில் மூன்று விண்வெளி வீரர்கள் இருக்கமுடியும். ஆனால், முழு எண்ணிக்கையில் வீரர்களை நிரப்ப விரும்பவில்லை.

பெண்களும் இதில் இருக்க வாய்ப்பு உண்டு. விண்வெளியில் ஏழு நாள்கள் இருக்கும்படியாக பயணத்தை திட்டமிட விரும்புகிறோம். ஆனால், இப்போது திட்டமிடல் நிலையிலேயே இப்பயணம் உள்ளது. வீரர்கள் தேர்வு உள்ளிட்ட எந்த செயல்பாடும் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆகவே, வீரர்கள் எண்ணிக்கை மற்றும் விண்வெளியில் இருக்கக்கூடிய கால அளவு போன்ற எதைக்குறித்தும் முடிவாக கூற இயலாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ககன்யான் விண்கலத்தில் ஒரு பெண் வீராங்கனையும் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று இதன்மூலம் தெரிய வந்துள்ளது.

More News >>