சோதனை மேல் சோதனை... சிபிஐ இயக்குநர் மீண்டும் நீக்கம்!

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ இயக்குநர் பொறுப்பேற்ற மறுநாளே அலோக் வர்மா மீண்டும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவுக்கும் சிறப்பு அதிகாரியான ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே நிகழ்ந்த அதிகார மோதலால் ஒரே நாள் இரவில் இருவரையும் விடுப்பில் அனுப்பியது மத்திய அரசு . இதை எதிர்த்து அலோக் வர்மா தொடர்ந்த வழக்கில் அவரை மீண்டும் பணியில் அமர்த்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ஆனால் முக்கிய முடிவுகள் எடுக்க அலோக் வர்மாவுக்கு நிபந்தனை விதித்தது. பிரதமர் தலைமையிலான உயர் மட்ட தேர்வுக் குழு கூடி அலோக் வர்மாவுக்கு அதிகாரங்களை முடிவு செய்யலாம் என்று நிபந்தனை விதித்தது. உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து நேற்று மீண்டும் சிபிஐ இயக்குநர் பொறுப்பேற்றார் அலோக் வர்மா. பதவியேற்றவுடன் தான் விடுப்பில் இருந்த போது சிறப்பு இயக்குநர் நாகேஸ்வரராவ் நடவடிக்கையால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளை மீண்டும் அதே இடத்தில் அமர்த்தி உத்தரவிட்டார்.

இன்றும் பல அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தார். இந்நிலையில் பிரதமர் தலைமையிலான உயர் மட்டக் குழுக் கூட்டம் இன்று மாலை கூடியது. பிரதமர் மோடி, மக்களைவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு பதிலாக நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகிய 3 பேர் குழு கூடி அலோக் வர்மாவின் பணிகள் குறித்து விவாதித்தனர். அலோக் வர்மா மீது மத்திய ஊழல் ஆணையத்தின் புகார் காரணமாக அலோக் வர்மாவை சி.பி.ஐ. இயக்குநர் பதவியிலிருந்து நீக்க குழுவில் முடிவு செய்யப்பட்டது.

இம்மாதம் 31-ந் தேதியுடன் அலோக் வர்மாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>