அலோக் வர்மாவை பதவி நீக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த கார் கே - பரபரப்பு தகவல்!
சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை பதவி நீக்கம் செய்ய மல்லிகார்ஜுன கார்கே எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகிய 3 பேர் கொண்ட உயர் மட்ட தேர்வுக் குழுக் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்துள்ளது. அலோக் வர்மாவை பதவியில் தொடர அனுமதிப்பதுடன் கட்டாய விடுப்பில் அனுப்பிய 77 நாட்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றாராம் கார்கே. அதற்கு நீதிபதி சிக்ரியோ, அலோக் வர்மா மீது பல புகார்கள் உள்ளது என்றாராம்.
என்னென்ன புகார் என்று சொல்ல முடியுமா? என்று கார்கே கேள்வி எழுப்ப இருவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் நடந்துள்ளது.இறுதியில் மோடியும், சிக்ரியும் அலோக் வர்மாவை பணி நீக்கம் செய்யும் முடிவை எடுத்ததாகத் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலோக் வர்மா பதவி நீக்கத்திற்கு காங்கிரஸ் கட்சியும் மோடியை கடுமையாக சாடியுள்ளது.
தன் மீதான குற்றச்சாட்டுகளை தன்னாட்சி படைத்த சிபிஐ ஆகட்டும், பாராளு மன்ற கூட்டுக் குழுவாகட்டும் எந்த அமைப்பும் விசாரிப்பதை மோடி விரும்பவில்லை என்பதையே காட்டுவதாக காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளது.