வேற வழியே இல்லை...அதிமுகவுடன் இணையத்தான் வேண்டும்...தினகரனுக்கு சசிகலா கட்டளை!
அதிமுகவுடன் இணைவதற்கான வேலைகளைத்தான் முதலில் செய்ய வேண்டும் என தினகரனுக்கு பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா கட்டளையிட்டுள்ளதாக மன்னார்குடி தகவல்கள் தெரிவிக்கின்றன.
சசிகலா சிறைக்குப் போன பின் மீண்டும் அரசியலில் தலை எடுக்க தொடங்கினார் தினகரன். ஒருகட்டத்தில் அமமுக என்கிற தனிக்கட்சியை தொடங்கி துணைப்பொதுச்செயலரானார் தினகரன்.
ஆனால் அதிமுக என்கிற பெரிய ஆலமரம் நம் கையில் இல்லையே என்பது சசிகலாவின் நீண்டகால வருத்தம். அதேநேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும் சசிகலாவுடனான சந்திப்புகளை சிறையில் அவ்வப்போது நடத்தியும் வருகிறது.
இந்நிலையில் தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பு சசிகலாவை ரொம்பவே அப்செட் ஆக்கிவிட்டதாம். இது தொடர்பாக தம்மை சந்தித்த தினகரனிடன், தகுதி நீக்க வழக்கில் முதலில் அப்பீல் செய்தாக வேண்டும். ஒருவேளை அத்தனை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்துவிட்டால் திமுக ஜெயித்துவிடும். எடப்பாடி அரசுக்கு அது ஆபத்தாக முடியும். அதனால் காலம் கடத்துவதற்காக அப்பீல் செய்ய வேண்டும் என தினகரனிடம் கட்டளையிட்டாராம் சசிகலா.
ஆனால் தினகரனோ, தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களே அப்பீல் செய்ய விரும்பவில்லை என கூறி நழுவி இருக்கிறார். இதை சசிகலா ரசிக்கவில்லையாம். அத்துடன் டெல்லி சொல்கிறபடி, அதிமுகவுடன் நாம் இணைந்தாக வேண்டும் எனவும் தினகரனிடம் கறாராக கூறினாராம் சசிகலா.
இதை தினகரன் ஏற்க மறுத்துவிட்டாராம்.. நீங்க வெளியில் வாங்க.. இணைப்பு பற்றி அப்போது பேசுவோம் என தெரிவித்திருக்கிறார். இருப்பினும் சசிகலா கடும் நெருக்கடி கொடுக்க, சரி நான் இணைய தயார்தான்.. ஆனால் அமமுக கட்சியை அதிகாரப்பூர்வமாக கலைக்க முடியாது என கூறிவிட்டாராம் தினகரன். இதனால் தற்போது தினகரன் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் சசிகலா என்கின்றன மன்னார்குடி வட்டாரங்கள்.
-எழில் பிரதீபன்