18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தால் எடப்பாடி ஆட்சி கவிழ்ந்துவிடுமே.... தினகரனிடம் பதறிய சசிகலா
தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்துதான் ஆக வேண்டும்; அப்படி செய்யாமல் போனால் இடைத்தேர்தல்களில் திமுக வெற்றி பெற்று எடப்பாடி ஆட்சி கவிழ்ந்துவிடும் என தம்மை சந்தித்த தினகரனிடம் பதறியபடி கூறியிருக்கிறாராம் சசிகலா.
சசிகலா சிறைக்குப் போன பிறகு தம்மை ஒரு ஆளுமையாக கருதி கொண்டு செல்வாக்கை வளர்த்து வருகிறார் தினகரன். அதுவும் ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி தந்த உற்சாகத்தில் தன்னை ஒரு எம்.ஜி.ஆர். போல கருதுகிறார் தினகரன்.
தமக்காகவே கூட்டம் கூடுகிறது என்கிற நினைப்பில் அவர் வலம் வருகிறார். இருப்பினும் சம்பிராதயங்களுக்காக சசிகலாவை அவ்வப்போது சிறையில் சந்தித்து வருகிறார்.
அண்மையில் பெங்களூரு சிறையில் தம்மை சந்தித்த தினகரனிடம் சசிகலா, அதிமுகவுடன் இணையத்தான் வேண்டும் என தினகரனிடம் வலியுறுத்தியிருந்தார் சசிகலா. அத்துடன் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என கண்டிப்புடன் கூறியிருக்கிறார் சசி.
அப்படி மேல்முறையீடு செய்யாமல் போனால் இடைத்தேர்தலை சந்திக்க நேரிடும்; இடைத்தேர்தல்களில் திமுக வெற்றி பெறும் நிலை இருப்பதால் எடப்பாடி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு கவிழவும் வாய்ப்பு இருக்கிறது. நம்மால் எடப்பாடி அரசு கவிழ்ந்தது என்கிற பழி வேண்டாம் எனவும் தினகரனிடம் தெரிவித்திருக்கிறார் சசிகலா.
சசிகலாவை நேரில் சந்திக்கும் போது பவ்யம் காட்டி தலையாட்டுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் தினகரன் இதற்கும் ஆகட்டும் என கூறியிருக்கிறார். ஆனால் மேல்முறையீடு செய்யவே வேண்டாம்; அமமுகவை கலைக்கவும் கூடாது என்பதில் மட்டும் தினகரன் உறுதியாக இருக்கிறாராம்.