உ.பி.யில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி உறுதியானது - நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது!
உ.பி.யில் சமாஜ்வாதி கட்சிக்கும் பகுஜன் பகுஜன் கட்சிக்கும் இடையே மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி உள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அகிலேஷ் யாதவும், மாயாவதியும் இணைந்து வெளியிடுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் அதிக எம்.பி.(80) தொகுதிகளைக் கொண்ட மாநிலம் உத்தரப் பிரதேசம். இங்கு கடந்த பொதுத் தேர்தலில் 73 தொகுதிகளைக் கைப்பற்றியது பா.ஜ.க. வரும் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த கூட்டணி சேருவது என சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் முடிவு செய்து பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இரு கட்சிகளும் தொகுதிகளை சம அளவில் பங்கீடு செய்து கொள்ள முடிவு செய்துள்ளன.
காங்கிரசை கூட்டணியில் சேர்க்காமல் இரு கட்சிகளும் கழற்றி விட்டாலும் சோனியா, ராகுல் போட்டியிடும் ரேபரேலி ,அமேதி தொகுதிகளில் இரு கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என முடிவு செய்துள்ளன. கூட்டணி குறித்த அறிவிப்பை அகிலேஷ் யாதவும், மாயாவதியும் கூட்டாக நாளை லக்னோவில் செய்தியாளர்களிடம் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.