எவ்வளவு காலத்திற்கு இலவசங்கள்..உயர் நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி!
இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தான் இலவசங்களை வழங்கப் போகிறீர்கள் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பொங்கலுக்கு குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ 1000 பரிசு அறிவித்தது தமிழக அரசு .இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அனைவருக்கும் ரூ.1000 பரிசு வழங்க நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் தடை விதித்தனர். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வேண்டுமானால் வழங்கலாம் என்று அனுமதித்த நீதிபதிகள், அரசுப் பணத்தை தாறுமாறாக வாரி வழங்க ஆட்சேபமும் தெரிவித்தனர்.
இந்நிலையில் சர்க்கரை மட்டும் வாங்கும் ரேசன் கார்டுதாரர்களுக்கும் டூ 1000 பரிசு வழங்க அனுமதி கோரி தமிழக அரசு நீதிபதிகளிடம் முறையீடு செய்தது. அப்போது நீதிபதிகள் தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர். இன்னும் எவ்வளவு காலத்திற்கு இலவசங்களை வழங்கப் போகிறீர்கள். ஒரு நாளைக்கு ஒருவர் 500 ரூபாய் சம்பாதிக்க முடியும் என்ற நிலை இருக்கும் போது விலையில்லா அரிசி வழங்குவது ஏன்? என்று அதிருப்தி தெரிவித்தனர்.
அத்துடன் அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருக்கும் போது ரூ.1000 பணத்திற்காக மக்களை பல மணி நேரம் ரேசன் கடைகள் முன் கால்கடுக்க காக்க வைப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினர். இதன் பின்னர் சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 பரிசு வழங்க நீதிபதிகள் சத்தியநாராமணன், ராஜமாணிக்கம் அனுமதி வழங்கினர்.