அப்ப நிதின் கட்காரி தலைமையிலான பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்குமோ?
பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருகிறது ஸ்டாலின் என்பது நீண்டகால குற்றச்சாட்டு. ஸ்டாலின் மருமகன் சபரீசன், பாஜகவின் டெல்லி புள்ளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால்தான் இந்த குற்றச்சாட்டு எழுந்தது.
திமுக அல்லது அதிமுகவின் முதுகில் சவாரி செய்துவிடலாம் என்பது பாஜகவின் அஜெண்டா. இரு குதிரைகளையும் பாஜகவுக்கு முதுகை காட்டித்தான் வந்தன.
ஒரு கட்டத்தில் திமுக தலைமையில் இடதுசாரிகள் உள்ளிட்ட மதச்சார்பின்மை பேசுகிற கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டன. டெல்லியில் காங்கிரஸுடனும் நெருக்கமானது திமுக.
இதனால் பாஜக எதிர்ப்பு முழக்கத்தை தீவிரமாக்கியது திமுக. மேலும் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் எனவும் ஸ்டாலின் பிரகடனம் செய்தார்.
இதனிடையே மோடி மீது கடும் அதிருப்தி இருப்பதால் தம்மை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதற்கான வேலைகளில் மும்முரமாக இருந்து வருகிறார் நிதின் கட்காரி. லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் நிதின் கட்காரி பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டால் திமுக ஆதரவு தரவும் வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் நிதின் கட்காரி தரப்புடன்தான் ஸ்டாலினின் கிச்சன் கேபினட் நெருக்கம் காட்டிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில்தான் ‘மோடி தலைமையிலான பாஜக’வுடன் கூட்டணி கிடையாது என ஸ்டாலின் திட்டவட்டமாக இன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அப்படியானால் நிதின் கட்காரி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அவர் தலைமையிலான பாஜகவுக்கு திமுக ஆதரவு தரும் என்பதற்கான சிக்னலா இது? என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கேள்வி.