ராஜபக்சவின் எதிர்ப்புக்கு மத்தியில் புதிய அரசியல் சட்டத்துத்துக்கான வரைவு அறிக்கை தாக்கல்
இலங்கையில் புதிய அரசியல்சட்டத்தை வரைவதற்கான யோசனைகள் அடங்கிய, நிபுணர் குழுவின் வரைவு அறிக்கையை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.
புதிய அரசியல்சட்டத்தை உருவாக்குவதற்காக, பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட யோசனைகளுக்கு அமைய, இதற்கென நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழுவினால், வரைவு அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியல்சட்டத்தில் இடம்பெற வேண்டிய விடயங்களை உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த வரைவு அறிக்கையை இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் 10.30 மணியளவில் நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
இதன்போது உரையாற்றிய, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பௌத்த மதத்துக்கு தற்போதைய அரசியல் சட்டத்தில் உள்ள முன்னுரிமையையோ அல்லது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களையோ உள்ளடக்கியதாக, புதிய அரசியல்சட்ட வரைவு தயாரிக்கப்படமாட்டாது என்று கூறினார்.
புதிய அரசியல்சட்டத்தின் மூலம் தாம் நாட்டைக் காட்டிக் கொடுக்கப் போவதில்லை என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரைவு அறிக்கையை முன்வைத்ததை அடுத்து, கட்சித் தலைவர்கள் உரையாற்றினர்.
முதலில் உரைநிகழ்த்திய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, புதிய அரசியல்சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு தற்போதைய நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார்.
புதிய அரசியல் சட்டத்தைக் கொண்டு வரும், தரப்பு உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது என்றும், எனவே, அரசியல்சட்டத்தை மாற்றும் அருகதை அவர்களுக்குக் கிடையாது என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு, தேர்தலின் போது, இரண்டு தரப்புகளும் புதிய அரசியல்சட்டத்துக்கான யோசனைகளை முன்வைத்து மக்களின் ஆணையைக் கோருவோம் என்றும், மக்களின் தீர்ப்புக்கு அமைய புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கலாம் என்றும், அவர் கூறினார்.
புதிய அரசியல்சட்டம் உருவாக்கப்படுவதற்கு மகிந்த ராஜபக்ச தரப்பு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருவதுடன், இந்த அரசியல் சட்டத்தினால் நாடு பிளவுபடும் என்றும், ஒன்பது துண்டுகளாக உடையப் போகிறது என்றும், இனவாதப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளது.
இந்தநிலையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மகிந்த தரப்பினரைப் போலித் தேசப்பற்றாளர்களாக நடிக்க வேண்டாம் என்று கோரியதுடன், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டுகின்ற படுமோசமானவர்கள் என்றும் காட்டமாக விமர்சித்தார்.
சிங்கள மக்களிடம் இனவாதத்தை தூண்டுவதை ராஜபக்ச தரப்பினர் கைவிட வேண்டும் என்று வலியுறுத்திய, இரா.சம்பந்தன், புலிகளுக்கு எதிரான போரை முன்னெடுப்பதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் ஆதரவு பெற்ற போது, இனப்பிரச்சினையைத் தீர்ப்பதாக ரொஜபக்ச அரசினால் வாக்குறுதி கொடுக்கப்பட்டது என்பதையும் நினைவுபடுத்தினார்.
புதிய அரசியல்சட்டத்தினால் நாட்டுக்கு ஆபத்து ஏற்படாது என்றும், அவசியமானது என்றும் குறிப்பிட்ட அவர், இது தேவையானதா என்பதை மக்களே தீர்மானிக்கட்டும் என்றும் ராஜபக்சவுக்குப் பதிலடி கொடுத்தார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்கவும், மகிந்த ராஜபக்ச தரப்பைக் கடுமையாகக் கண்டித்தார்.
ராஜபக்சவும், அவரது சகாக்களும் பௌத்த விகாரைகளுக்கு சென்று போலியான பிரச்சாரங்களை முன்னெடுப்பதாகவும், புத்தபெருமானின் பிரித் நூல்களைக் கட்டிக் கொண்டு, பொய் கூறி வருவதாகவும், அனுரகுமார திசநாயக்க எம்.பி கடுமையாக சாடியுள்ளார்.