எல்லாமே தலைகீழா நடக்குது.. மத்திய அரசை வறுத்தெடுத்த அலோக் வர்மாவின் கடிதம்!
ஓய்வு வயதைக் கடந்து பணி நீட்டிப்பில் சிபிஐ இயக்குநர் பொறுப்பில் அமர்த்தப்பட்டேன். அது கூடத் தெரியாமல் தீயணைப்புத் துறை பணிக்கு அனுப்பியது எப்படி? இந்த ஆட்சியில் எல்லாமே தலைகீழாக நடக்கிறது என்று அலோக் வர்மா காட்டமாக எழுதியுள்ள கடிதம் மத்திய அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அலோக் வர் மாவுக்கு தீயணைப்புத் துறையில் பணி வழங்கியது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்தப் புதிய பதவிக்கும் தமக்கும் சம்பந்த மில்லை. எப்போதோ பணி ஓய்வு பெற்றுவிட்ட தாம், பணி நீட்டிப்பில் தான் சிபிஐ இயக்குர் பதவியில் அமர்த்தியது. அது கூட தெரியாமல் மாறுதல் உத்தரவு பிறப்பித்தது எப்படி? என்று காட்டமாக மத்திய பணியாளர் நலத்துறை செயலாளர் சந்திரமௌலிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
2017 ஜூலை மாதமே ஓய்வு பெற்றுவிட்டேன். சிபிஐ இயக்குநர் பதவிக்காகவே 2019 ஜனவரி 31 வரை பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதை கடிதத்தில் அலோக் வர்மா சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் சிபிஐ என்ற தன்னாட்சி அமைப்பு மீது ஆளும் கட்சி எம்.பி.க்களால் நியமிக்கப்பட்ட மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மூலம் குற்றம் சுமத்துவது தன்னாட்சி அமைப்புகளை சிதைப்பது போலாகிறது. இதுவரை 40 வருட பணிக் காலத்தில் பணியாற்றிய அனைத்துத் துறைகளிலும் கெளரமாக நடத்தப்பட்டேன்.
தற்போது கிடைத்த அனுபவம் மிக மோசமானது என்றும் இன்னும் பல்வேறு குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மீது சுமத்தியுள்ளார். அலோக் வர்மாவின் இந்தக் கடிதம் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.