ஆஸ்திரேலியாவுக்கு உத்வேகம் தருமா பழைய ஜெர்ஸி?
இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி தொடர் சனிக்கிழமை (டிசம்பர் 12) ஆரம்பமாக உள்ளது. சிட்னியில் நடைபெற உள்ள முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியினர் பழைய பாணியிலான ஆடையை அணிந்து விளையாட உள்ளனர்.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா இழந்துள்ளது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாக உள்ளது. இத்தொடரில் வீரர்களை உத்வேகம் அடையச் செய்யும்பொருட்டு பழைய பாணியிலான ஆடை திரும்ப கொண்டு வரப்பட்டுள்ளது. 1986ம் ஆண்டு ஆலன் பார்டர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்தபோது, அணியின் ஆடையாக இருந்த பச்சை மற்றும் தங்கமய மஞ்சள் நிறம் கொண்ட ஜெர்ஸி உள்ளிட்ட உடையை அணிந்து வீரர்கள் ஒருநாள் போட்டியில் ஆட உள்ளார்கள்.
பழைய உடை திரும்பியுள்ளதுபோன்றே, கடைசியாக 2010ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடிலும் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். 34 வயதான சிடில், "நான் அணிக்குத் திரும்புவது குறித்து ஒருபோதும் நினைத்துப்பார்த்ததில்லை. இது ஆச்சரியமான விஷயம். நான் மீண்டும் புதிதாக தொடங்குவதுபோல உணர்கிறேன்," என்று கூறியுள்ளார்.
பழைய ஆடையும் பழைய பௌலரும் ஆஸ்திரேலிய அணிக்கு பலன் தருவார்களா பார்ப்போம்!