ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஏல அறிவிப்பு: தமிழக அரசு நிராகரிக்க தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தல்
நாகை மாவட்டம் கருப்பன்புலம், கரியாபட்டினம் உள்ளிட்ட நான்கு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது, இதனை வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழக அரசு இதனை அனுமதிக்காமல் நிராகரிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :
தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பனுக்கு எதிரான போராட்டம் ஓய்ந்துவிடவில்லை; ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. காரணம், மக்களின் ஏகோபித்த எதிர்ப்பால் அத்திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டதுதான். ஆனால் மக்கள் அமைதியாக இருக்கும் இந்த நேரம் பார்த்து டெல்டா மாவட்டங்களில் ஒன்றான நாகப்பட்டினத்தில் மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான புதிய ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.
இந்தியாவில் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக ‘ஹைட்ரோகார்பன் வளங்களைக் கண்டறிதல் மற்றும் உரிமம் வழங்குதல்’ என்ற கொள்கையை மத்திய அரசு கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. அனைத்து வகையான ஹைட்ரோ கார்பன் வளங்களையும் ஒரே உரிமத்தின் மூலம் கண்டறிந்து எடுப்பதே இக்கொள்கையின் நோக்கமாகும். இத்திட்டத்தின்கீழ் இரண்டாம் கட்ட ஏல அறிவிப்பாக ஜனவரி 7ந் தேதி டெல்லியில் வெளியிடப்பட்டது. இந்தியா முழுவதும் மொத்தம் 14 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்து அவற்றுக்கான ஏலம் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு அன்று வெளியிடப்பட்டது.
அதன்படி தமிழ்நாட்டில் நாகையில் மொத்தம் 471.19 சதுர கி.மீ பரப்பளவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு திருப்பூண்டி, கரியாபட்டினம், கருப்பபன்புலம், மடப்புரம் உள்ளிட்ட 4 கிராமங்களில் கிணறுகள் அமைத்து ஹைட்ரோகார்பன் எடுக்கப்படும்.
தமிழகத்தின் எதிர்ப்பை மீறி மீண்டும் இப்படி புதிய திட்டத்தினை அறிவித்திருப்பது, சினிமாவில் வரும் தொடர் கொலையாளி தன் கொலைத்திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள புதுப் புது உத்திகளைக் கையாளுவதையே நினைவுபடுத்துகிறது.
சுற்றுச்சூழல் சீர்கேட்டால் ஏற்படும் பருவநிலை மாற்றப் பேராபத்து குறித்து உலகமே கவலைப்படுகிறது. ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள்தான் அதற்குக் காரணம். ஆனால் இந்தப் பேரழிவுத் திட்டத்தை தமிழர்கள் தலையில் கட்டுவதற்கு நிற்கிறது மத்திய அரசு.
கஜா புயலால் வீழ்ந்துகிடக்கும் நாகை மாவட்டத்தில் ஹைட்ரோகார்பனையும் திணிப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது மட்டுமல்ல; மக்களின் வாழ்வாதாரங்களையே முற்றாக அழிப்பதாகும்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழக அரசு இதனை அனுமதிக்காது நிராகரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.