ரணிலுக்கு ராகுல் வாழ்த்து மூன்று வாரங்களுக்கு பின் சென்றடைந்த கடிதம்
இலங்கைப் பிரதமராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் பதவியேற்றுள்ளமைக்கு வாழ்த்து தெரிவித்து, இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அனுப்பிய வாழ்த்துச் செய்தி மூன்று வாரங்களுக்குப் பின்னர், இலங்கைப் பிரதமரின் கையில் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி, அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
52 நாட்கள் நீடித்த அரசியல் நெருக்கடிக்குப் பின்னர் அவர், கடந்த டிசெம்பர் 16ஆம் தேதி மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார்.
மீண்டும் இலங்கையின் பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கவுக்கு, வாழ்த்து தெரிவிக்கும் கடிதம் ஒன்றை, இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அனுப்பியிருந்தார்.
2018 டிசெம்பர் 18ஆம் தேதியிடப்பட்ட இந்தக் கடிதம், இலங்கைப் பிரதமர் செயலகத்துக்கு, மூன்று வாரங்களுக்குப் பின்னர், 2019 ஜனவரி 10ஆம் தேதியே கிடைத்துள்ளது.
அந்தக் கடிதத்தில், “இலங்கையின் பிரதமராக மீண்டும் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டு பதவியேற்றுள்ள உங்களுக்கு எனது வாழ்த்துகள்.
அண்மைய அரசியல் நிலைமைகள், மற்றும் அரசியல்சாசன நெருக்கடியின் விளைவாக, இலங்கையின் அரசியல் உறுதிப்பாடு குறித்து நாம் கவலையடைந்திருந்தோம். உங்களுக்கு சாதகமாக அமைந்த நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்பன நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிரூபித்திருக்கின்றன. அரசியல்சட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது.
வெற்றிகரமாக நீங்கள் பணியை மீண்டும் ஆரம்பித்திருப்பதற்கு, இந்தச் சந்தர்ப்பத்தில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.