சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன்! மீடியாக்களை சந்திக்க விரும்பும் ராபர்ட் பயஸ்
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸ், பத்திரிகையாளர்களை சந்தித்து தனது கருத்துக்களைப் பகிர்வதற்கு அனுமதி கேட்டுள்ளார். இவ்வாறு ஊடகத்தினரை சந்திப்பதற்கு சட்டம் அனுமதிப்பதாகவும் சொல்கின்றனர் சட்ட நிபுணர்கள்.
தமிழக சிறைத்துறை இயக்குநருக்கு ராபர்ட் பயஸ் எழுதியுள்ள கடிதத்தில், கருவுற்றிருந்த மனைவியுடன் உள்நாட்டுப் போர் நடந்த இலங்கையிலிருந்து 1990 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தேன். 21.05.1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம், எனது வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுவிட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ம் தேதி உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வானது, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161ன்கீழ் மாநில அரசே விடுதலை செய்வது குறித்துப் பரிசீலிக்க உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் தமிழக அமைச்சரவை கடந்த செப்டம்பர் 9-ம் தேதி கூடி எனக்கும் ஏனைய அனைவருக்கும் விடுதலைக்கான பரிந்துரையை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இதுகுறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இது நான்கு மாத துன்பமோ அல்லது நான்கு ஆண்டுகள் துன்பமோ இல்லை.
ஏறத்தாழ 28 ஆண்டுகளாக நீதி மறுக்கப்பட்டவர்களின் துன்பம். விடுதலையைத் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் விவரிக்க முடியாத மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கிறேன். சிறையில் இருந்த கால கட்டத்தில் என் தந்தையை இழந்துவிட்டேன். நோய் வாய்ப்பட்டிருக்கும் என் தாயைப் பராமரிக்க இயலாத நிலையில் வாழ்கிறேன். என் மனைவியும் மகனும் தொலைதூரத்தில் அநாதைகளைப் போல் வாழ்கின்றனர்.
ஆகையால்தான் கடந்த 2017-ம் ஆண்டு கருணைக் கொலை செய்யக் கோரி தமிழக முதல்வருக்கு விண்ணப்பம் அளித்திருந்தேன். இதுபோல் நம்பிக்கைக்கும் அவ நம்பிக்கைக்கும் இடையில் தொடர்ந்து வாழ்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது முடிவுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன். எனவே, எனது விடுதலை குறித்து சிலவற்றை சொல்ல விரும்புவதால் செய்தி ஊடகங்களைச் சந்தித்து பேச அனுமதி அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.