தனியார் பள்ளியிலிருந்து மாநகராட்சி பள்ளிக்கு மாறிய தேசிய சாம்பியன்

திருப்பூரில் கடந்த டிசம்பர் 29 முதல் 31ம் தேதி வரை 64வது தேசிய பள்ளிகளுக்கிடையேயான கேரம் போட்டிகள் நடந்தன. பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து ஏறத்தாழ 439 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர்.

இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் இப்போட்டிகளை நடத்தியது. பதினான்கு வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் குழு மற்றும் தனிநபர் போட்டிகளில் மதுரை கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவி அஸ்விகா தங்கப் பதக்கம் வென்றார். அஸ்விகாவின் பெற்றோர் ஹரிஹரன், நித்யா. தந்தை ஹரிஹரன் நகைக்கடை ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

எட்டாம் வகுப்பு வரை தனியார் பள்ளி ஒன்றில் அஸ்விகா படித்து வந்தார். கேரம் போட்டிகளில் பங்கேற்பதற்கு பள்ளி நிர்வாகம் விடுப்பு அளிக்க மறுத்தது. அஸ்விகாவின் பயிற்சியாளர் ராஜா சங்கரின் ஆலோசனையின்பேரில் அஸ்விகா, ஒன்பதாம் வகுப்புக்கு மாநகராட்சி பள்ளிக்கு மாறினார். அரசுப் பள்ளி, அஸ்விகாவின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவித்தது. அதன்காரணமாக, அஸ்விகாவால் போதிய அளவு போட்டிகளில் பங்குபெற முடிந்தது.

தற்போதைய போட்டியில் ஜம்மு காஷ்மீர், புதுடெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களை சார்ந்த போட்டியாளர்களை வென்று அஸ்விகா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

டிசம்பர் மாதம் போட்டிகள் நடந்ததால், அரையாண்டு தேர்வில் பல பாடங்களுக்காக தேர்வுகளை அஸ்விகாவால் எழுத இயலவில்லை. போட்டிகளுக்குப் பின்னர் பள்ளி நிர்வாகம் அவருக்கென்று சிறப்பு தேர்வுகளை நடத்தியுள்ளது.

அஸ்விகாவின் சாதனைகளுக்கு உதவும் அரசுப் பள்ளியை நாமும் வாழ்த்துவோம்!

More News >>