2 பேரன்களுக்கும் சீட் ..... எம்.பி.தேர்தலில் தேவகவுடா குடும்பத்தில் 3 பேர் போட்டி!

தேவகவுடா குடும்பத்தில் 3-வது தலைமுறையும் அரசியலில் குதிக்கிறது. வரும் லோக்சபா தேர்தலில் தனது இரண்டு பேரன்களையும் நிறுத்த தொகுதிகளைத் தயார் செய்து விட்டார் கவுடா.

கர்காடகா மதச்சார்பற்ற ஜனதா தளம் என்றால் அது தேவகவுடாவின் குடும்பக் கட்சியாகிவிட்டது. தேவகவுடா ஹாசன் தொகுதி எம்.பி மற்றும் கட்சியின் தலைவர். இளைய மகன் குமாரசாமியோ மாநிலத்தின் முதல்வர். மற்றொரு மகன் ரேவண்ணா பொதுப் பணித்துறை அமைச்சர்.

குமாரசாமி மனைவி அனிதா எம்.எல்.ஏ வாகவும், ரேவண்ணாவின் மனைவி பவானி ஜில்லா பரிஷத் தலைவராகவும் உள்ளனர். இப்போது கவுடாவின் 3-வது தலைமுறையும் லோக்சபா தேர்தலில் குதிக்கத் தயாராகிவிட்னர்.

ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலேயே போட்டியிட அடம் பிடித்தாராம். கவுடாதான் எம்.பி.தேர்தலில் தன்னுடைய ஹாசன் தொகுதியை விட்டுத் தருவதாகக் கூறி சமாதானப்படுத்தினாராம்.

அதனால் பிரஜ்வாலை ஹாசன் தொகுதியில் நிறுத்திவிட்டு மைசூரு தொகுதிக்கு மாற தேவகவுடா முடிவு செய்துள்ளார். பிரஜ்வாலுக்கு கொடுத்தால் நானும் எம்.பி. ஆகணும் என கவுடாவின் மற்றொரு பேரனும் குமாரசாமியின் மகனுமான நிகிலும் வீம்புக்கு நிற்கிறார்.

28 வயதான நிகில் தற்போது கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக உள்ளார். இதனால் நிகிலுக்கு மாண்டியா தொகுதியை ஒதுக்க கவுடா குடும்பம் முடிவு செய்துள்ளது. மாண்டியா தொகுதி குமாரசாமி வழக்கமாக போட்டியிடும் தொகுதி.முதல்வரானதால் குமாரசாமி எம்.பி.பதவியை ராஜினாமா செய்ய அங்கு நடந்த இடைத் தேர்தலில் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சிவராமி கவுடா வெற்றி பெற்றார்.

வரும் தேர்தலில் பேரனுக்குத் தான் சீட் என கவுடா கூறியதால் சிவராமி கவுடா உள்ளிட்ட கட்சியின் பிற தலைவர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாசியுள்ளனர். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு தெற்கு கர்நாடகாவில் மட்டுமே செல்வாக்கு என்பதும் குறிப்பிடத்தக்கது. மண்டியா, மைசூரு, ஹாசன் எம்.பி. தொகுதிகளில் தொடர்ந்து இக்கட்சிக்கே வெற்றி கிடைத்து வருகிறது. இம்முறை தேவகவுடா, அவரது பேரன்கள் இருவர் என 3 பேர் எம்.பி. தேர்தலில் போட்டியிட உள்ளனர். இதனால் பதவிகள் அனைத்தும் கவுடா குடும்பத்துக்கே தானா? என அக்கட்சிக்குள் அதிருப்தியும், குழப்பமும் தீவிரமாகியுள்ளது.

More News >>