ராகுலும் மோடியும் ரஃபேலும்... அடடா திருமண அழைப்பிதழ்!

குஜராத் அருகேயுள்ள தாத்ரா நாவேலி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த சில்வாஸா என்ற இடத்தில் நடக்க உள்ள திருமண வரவேற்பு அழைப்பிதழ் ஒன்று புதுமையான கோரிக்கையோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ரஃபேல் விவகாரம் குறித்தும் இந்த அழைப்பிதழில் வாசகங்கள் மற்றும் படங்கள் இடம் பெற்றுள்ளன.  ஜனவரி 22ம் தேதி, சில்வாஸாவில் ரிசார்ட் ஒன்றில் யுவராஜ் - சாக்ஷி தம்பதியரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எல்லா திருமண அழைப்பிதழ்களையும் போலவே வடிவமைக்கப்பட்டுள்ள இதில், மணமக்களுக்கு அளிக்கக்கூடிய பரிசாக குறிப்பிடப்பட்டுள்ளது வித்தியாசமாக உள்ளது. நமோ என்ற செயலி வழியாக பாரதீய ஜனதாவுக்கு நன்கொடை அளிப்பது மற்றும் 2019 மக்களவை தேர்தலில் மோடிக்கு வாக்களிப்பது ஆகியவையே தங்களுக்கு அளிக்கக்கூடிய வெகுமதி என்று மணமக்கள் வீட்டார் சார்பில் அழைப்பிதழின் கீழ் ஒரு குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சாதாரண விமானத்திற்கும் போர் விமானத்திற்கும் வேறுபாடு உள்ளது. ஆகவே, விலையிலும் வித்தியாசம் இருக்கும் என்பது ஒரு முட்டாளுக்குக்கூட தெரியும் என்பது போன்று ரஃபேல் விமான பேரத்தை நியாயப்படுத்தும் ஒன்பது குறிப்புகளும் இந்த அழைப்பிதழில் இடம் பெற்றுள்ளன. சூரத்தை சேர்ந்த தாவல் - ஜெயா தம்பதியர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மோடிக்கு வாக்குக்கேட்கும் வகையில் திருமண அழைப்பிதழ் வடிவமைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More News >>