கோடநாடு சம்பவம் ... பதுங்குவதைப் பார்த்தால் எடப்பாடி தான் முதல் குற்றவாளி? மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கோடநாடு கொலை, சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தத் தயார் எனக் கூற முடியுமா?என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். வழக்குப் போடுவேன் என்று கூறி நழுவுவதைப் பார்த்தால் அவர் தான் முழு குற்றவாளி என்ற சந்தேகம் வருகிறது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கோடநாட்டில் நடந்த கொள்ளை மற்றும் தொடர் கொலை சம்பவங்கள் குறித்து தெகல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூஸ் ஆதாரங்களுடன் வெளியிட்ட தகவல் தமிழக அரசியலில் சூறாவளியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

கோடநாடு சம்பவம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், மாத்யூஸ் வெளியிட்ட வீடியோவில் தம்மை சம்பந்தப்படுத்தியுள்ளனர். அதில் எள்ளளவும் உண்மையில்லை. என் மீது அவதுறு பரப்புபவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், கோடநாடு சம்பவங்கள் பின்னணியில் எடப்பாடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை ஆணையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் நாளை மனு கொடுக்கப்படும். ஜனாதிபதியைச் சந்தித்தும் முறையிட உள்ளோம். இந்தப் பிரச்னையில் நீதி விசாரணை நடத்தப்படும் என எடப்பாடி பழனிச்சாமி கூற முடியமா? தம் மீதான கொலைப் புகாரை நிருபித்தால் உடனே பதவி விலகுவேன் என அறிவிக்கத் தயாரா? இதையெல்லாம் விடுத்து புகார் கூறுபவர்கள் மீது வழக்குப் போடுவேன் என்று கூறி எடப்பாடி நழுவுவதைப் பார்த்தால் அவர் தான் முழு குற்றவாளி என்ற சந்தேகம் வருகிறது.

கோடநாடு விவகாரம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.

More News >>