போகிப் பண்டிகை உற்சாகம்.. புகை மண்டலமானது சென்னை.. விமான சேவை கடும் பாதிப்பு!

சென்னை மக்களின் போகிப் பண்டிகை உற்சாகத்தில் பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தியதில் காற்று மாசு அதிகரித்து புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதனால் விமான சேவை பாதிக்கப் பட்டதுடன் சாலைகளில் வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர். இன்று அதிகாலை முதலே சென்னை நகர் முழுவதும் பழைய பொருட்களை தீ வைத்து கொளுத்த ஆரம்பித்து விட்டனர். சிறுவர்களும், இளை ஞர்களும் மேளம் அடித்து ஆட்டம் பாட்டத்துடன் டயர், பிளாஸ்டிக், விறகு என கண்ணில் சிக்கிய பொருட்களை எல்லாம் குவித்து தீயிட்டு கொளுத்தினர்.

போகி கொண்டாட்டத்தால் சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதி முழுவதும் புகை மண்டலமானது. அதிகாலைப் பனியுடன், புகை மூட்டமும் சேர்ந்ததால் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வர வேண்டிய விமானங்களும் வேறு ஊர்களுக்கு திருப்பி விடப்பட்டன. அதிகாலை முதல் காலை 9 மணி வரை புகை மூட்டம் தான்.

அதன் பிறகே புகை மூட்டம் ஓரளவு குறைந்தவுடன் விமானங்கள் இயக்கப்பட்டன. சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கும் கடும் சிரமம் ஏற்பட்டது. இன்று காலை சென்னையில் காற்று மாசு 245 பி.எம்.ஐ. தாண்டி பதிவாகியுள்ளது.

More News >>