கொடநாடு கொள்ளை, கொலை மர்மம்.. சிபிஐ விசாரிக்க வேண்டும்.. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
கொடநாடு கொள்ளை, தொடர் கொலைகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
கொடநாடு மர்மம் குறித்து தெகல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல் வெளியிட்ட ஆவணப் படம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார் என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தி ஆதாரங்களை வெளியிடவும் தயார் என்று கூறியிருந்தார்.
மாத்யூவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள எடப்பாடி, தமக்கு எதிராக திட்டமிட்டு அரசியல் சதி நடப்பதாக கூறினார். இதனால் அவதூறு பரப்புவதாக மாத்யூ, சயன், மனோஜ் ஆகியோர் மீது சென்னை போலீசார் வழக்குப் பதிந்தனர். டெல்லியில் சயன், மனோஜை கைது செய்து சென்னைக்கும் அழைத்து வந்துள்ளனர்.
தலைமறைவான மாத்யூ வையும் தேடி வருகின்றனர். கொடநாடு மர்மத்தில் எடப்பாடி மீது குற்றச்சாட்டு எழுவதால் அவர் பதவி விலக வேண்டும். நீதி விசாரணை நடத்த மத்திய விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.இது தொடர்பாக ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோரிடம் மனு கொடுக்கப் போவதாகவும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கொடநாடு கொள்ளை, கொலைகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தொடர்ந்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது புகார் எழுந்துள்ளதால் இந்த வழக்கை தமிழக போலீஸ் விசாரிப்பது ஏற்புடையதாக இருக்காது. எனவே சிபிஐ விசாரிக்க வேண்டும் என டிராபிக் ராமசாமி மனுவில் கூறியுள்ளார்.