தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?

ஒருமுறை வீழ்ந்தாலே எழ முடியாத சினிமா உலகில் பல தோல்விகளை தாண்டி ஃபீனிக்ஸ் பறவையாக எழுந்து, தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் தனது இலக்கை நோக்கிய துல்லியமான பயணித்து வெற்றிகளை செதுக்கியவர் நடிகர் அஜித்குமார். இளைஞர்களின் உத்வேகமாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டதோடு, நடிப்பை தாண்டி பல தலங்களிலும் மிளிரும் தல அஜித்தின் 50 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

1971 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்த அஜித்குமாருக்கு, சிறுவயது முதல் சென்னையே அவரது சொந்த ஊராகிப் போனது. ஆரம்ப காலத்தில் பைக் மெக்கானிக்காகவும், அதில் ஏற்பட்ட தீராக் காதலால் பைக் ரேஸராகவும் வாழ்க்கையை தொடர்ந்தார். பைக் ரேஸில் கிடைத்த வெற்றித் தழும்புகள் அவரை மாடலிங்க் துறைக்கும், அடுத்தக் கட்டமாக சினிமா துறைக்கும் திசைத் திருப்பியது. அந்தத் திருப்பம் அஜித்துக்கு மட்டும் மாற்றத்தை கொடுக்காமல், திரைத்துறையில் ஒரு பெரும் பிரளயத்தையே உருவாக்கும் என அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.

தனது 20வது வயதில் தெலுங்குத் திரைப்படத்தின் மூலம், சினிமா உலகுக்கு அறிமுகமான அஜித், தமிழ் திரைத்துறையில் அமராவதி படத்தின் மூலம் அவதாரமெடுத்தார். ஆசை திரைப்படம் வெகு சிறப்பான அங்கீகாரத்தைக் கொடுக்க, தொடர்ந்து வெளியான காதல் கோட்டை அஜித் என்ற நடிகனை தங்கள் வீட்டுப் பிள்ளையாக நேசிக்கும் அளவிற்கு ஒவ்வொரு குடும்பங்களிலும் கொண்டு சேர்த்தது. காதல் மன்னன், அவள் வருவாளா, அமர்க்களம், முகவரி, வாலி போன்ற படங்கள் ஒட்டுமொத்த இளைஞர்களையும் வசியப்படுத்தியது.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பூவெல்லாம் உன் வாசம் என கனிந்துருகும் காதல் படங்கள் ஆகட்டும், தீனா ரெட், பில்லா, மங்காத்தா போன்ற அதிரடி கதைக் களமாகட்டும் அஜித்தின் நேர்கொண்ட பார்வையில் எல்லாமே வரலாறாகிப் போனது. தமிழ் சினிமாவில் அஜித்தின் வெற்றிகளை விட தோல்வி படங்களின் எண்ணிக்கையே நெடியது. ஆனாலும் அவைகளை மிக திடமான மன உறுதியால் தகர்த்தெறிந்த வலிமை மிகுந்தவராக பயணித்துக் கொண்டிருப்பதே அஜித்தின் தனிச் சிறப்பு.

நடிப்பையும் தாண்டி ஃபார்முலா ஒன் ரேஸர், துப்பாக்கிச் சுடுதல், ட்ரோன் விமானம் தயாரிக்கும் தொழில்நுட்ப வல்லுநராகவும் பல துறைகளில் சாதனை படைத்து வருகின்றார் அஜித். அதனால் தான் என்னவோ ரசிகர் மன்றங்கள் இல்லாத போதும், அஜித்தின் மீது பேரன்பு கொண்ட கோடான கோடி ரசிகர்கள், அவரை கொண்டாடித் தீர்க்கின்றனர்.

தான் நடித்த திரைப்படங்களில் தோல்வி அவரை சைக்காலஜிக்காக மற்றும் எமோஷ்னலாக அதிகம் பாதித்தாலும் கூட தோல்விகளையும், துயரங்களையும் தாண்டி மீண்டும் மீண்டும் தன்னை நிரூபிக்கும் அஜித் தமிழ் சினிமாவின் ஃபீனிக்ஸ் பறவை என குறிப்பிட்டால் தவறில்லை. எத்தனை முறை எரிந்தாலும் மீண்டும் மீண்டும் வரும் ஃபீனிக்ஸ் பறவை போல என படத்தில் வசனமும் வரும். அது படத்தை விட அஜித்தின் நிஜ வாழ்க்கைக்கும் அதிகம் பொருந்தும்.

You'r reading தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மிஸ்டர் இந்தியா ஜெகதீஷ் லாட் உயிரை பறித்த கொரோனா – சோகத்தில் குடும்பம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்