திபெத்திய புத்த துறவியான தலாய் லாமாவின் வரிகளை மெர்சிடிஸ் விளம்பரத்தில் பயன்படுத்திய காரணத்துக்காக மெர்சிடிஸ் நிறுவனம் தற்போது சர்சையில் சிக்கியுள்ளது.
மெர்சிடிஸ் நிறுவனம் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு கார் உற்பத்தி நிறுவனமாகும். இதனுடைய சீன நிறுவனக் கிளை விளம்பரத்துக்காக கடந்த திங்கள் கிழமை நிறுவனத்தின் வலைதளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர். அந்தப் புகைப்படத்தில் கடற்கரையோரம் வெள்ளை நிற மெர்சிடிஸ் கார் நிற்பது போலவும் அதன் மேலே திபெத்திய புத்த துறவியான தலாய் லாமாவின் வரிகள் இடம்பெற்றுள்ளது.
இதனாலேயே பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. சீனாவில் தலாய் லாமா மீதும் அவரது கொள்கைகளும் மீதும் எதிர்ப்பு கொண்டவர்களே அதிகம். இதனாலேயே சீனா மெர்சிடிஸ் நிறுவனம் மீது கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. இதனால் மெர்சிடிஸ் நிறுவனத்துக்கு எதிராக சீனாவில் பெரும் எதிர்ப்பலை எழுந்துள்ளது.
சீனாவின் அழுத்தத்தால் பணிந்த மெர்சிடிஸ் நிறுவனம் பொருத்தமில்லாமல் வெளியிட்ட தங்களது விளம்பரத்துக்காக மன்னிப்புக் கேட்பதாக அறிவித்துள்ளது. மேலும் தலாய் லாமா வரிகள் தொடர்பான விளம்பரத்தையும் மெர்சிடிஸ் நிறுவனம் நீக்கியுள்ளது.