சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு

Jul 27, 2018, 20:36 PM IST

மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று இரவு தொடங்குவதால், திருப்பதி கோயில் நடை சாத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று இரவு 11.54 மணிக்கு தொடங்குகிறது. சூரியனும் பூமியும் சந்திரனும் ஒரே நேர் கோட்டில் வரும் சந்திரகிரகணம் இந்த நூற்றாண்டின் மிக நீளமானதும் கூட. பொது மக்கள் வெறும் கண்களால் கிரகணத்தை பார்க்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சாமி தரிசனம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, மாலை 5 மணிக்கு அர்ச்சகர்கள் கருவறை முதல் கோயிலுக்குள் உள்ள பாஷ்யகார்ல சன்னதி, யோக நரசிம்மர், வரதராஜ சுவாமி சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதி கதவுகளும் அடைக்கப்பட்டு கோயிலின் ராஜகோபுர கதவுகள் பூட்டு போடப்பட்டன.

இந்நிலையில், கிரகணம் முடிந்த பிறகு, நாளை அதிகாலை 4.15 மணிக்கு நடை திறக்கப்பட்டு முழுவதும் சுத்தம் செய்து சிறப்பு பூஜைகள், தோமாலை சேவை, அர்ச்சனை ஆகிய சேவைகள் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் அர்ச்சகர்கள் மட்டும் ஏகாந்தமாக செய்ய உள்ளனர். காலை 7 மணி முதல் சர்வ தரிசனத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.பௌர்ணமி முன்னிட்டு நடைபெற இருந்த அனைத்து கருட சேவையையும் தேவஸ்தானம் ரத்து செய்தது.

ஆனால், காளஹஸ்தி கோயிலில் இரவில் கிரகண சால சிறப்பு அபிஷேகம் நடைபெறும் என்பதால் நடை சாத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, அனைத்து கோயில்களிலும் கிரகண காலங்களில் நடை சாத்தப்பட்டு கிரகண சாந்தி அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னரே சாமி தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிப்பார்கள். ஆனால் ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் மட்டும் கிரகண காலங்களிலும் பூஜை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு Originally posted on The Subeditor Tamil

More Spirituality News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை