மனைவியுடன் சண்டையா... சரி செய்வது எப்படி?

Is Healthier Mindset the Way to Better Relationships?

by SAM ASIR, Apr 16, 2019, 21:49 PM IST

'வீட்டுக்கு வீடு வாசற்படி' என்பார்கள். ஆம், எல்லா வீட்டுக்கும் வாசல் படிகள் இருப்பதுபோல் எல்லா குடும்பத்திலும் சண்டையும் இருக்கும். பல சண்டைகள், சமாதானத்தில் முடிந்து அதன்பின் கணவனுக்கும் மனைவிக்குமான உறவு வலுப்படும். ஊடலுக்குப் பின் காதல் என்று அதற்காகவே கூறப்படுகிறது.

ஆனால், வார்த்தைகளால் காயப்பட்டு சில நேரம் உறவில் பிளவு ஏற்பட நேரலாம். கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான விரிசல் குடும்பம் முழுவதையுமே பாதிக்கும். சில பிளவுகள், சரியாகாமல் போகக்கூடிய அபாயமும் உண்டு. சில விஷயங்களில் கவனமாக இருந்தால் தம்பதியர் இடையே விரிசல் ஏற்படாமல் தடுக்கலாம்.

குறைவாக குற்றஞ்சாட்டுங்கள்: 

பெரும்பாலான பிரச்னைகளுக்கு பெரிய பெரிய எதிர்பார்ப்புகளே காரணமாக இருக்கின்றன. பெரிதாக எதிர்பார்த்து அது நடக்காமல் போகும்போது வரும் ஏமாற்றம் உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது. ஒரு காரியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும்போது அது இணையிடம் உங்கள் மீது எரிச்சலை உருவாக்குகிறது. உங்கள் கணவன் / மனைவியிடம் குறைந்த எதிர்பார்ப்பு கொண்டிருங்கள். 'நான் நினைப்பது சரியானதுதான்' என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், உங்கள் கணவர் அல்லது மனைவி பார்வையில் அது வேறு விதமாக தெரியலாம். ஆகவே, எப்போதும் குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பதை தவிர்த்துவிடுங்கள்.

இருக்கும் வண்ணமாகவே ஏற்றுக்கொள்ளுங்கள்:

குறைகள் இருக்கலாம். ஆனால், அதை மெதுவாக ஏற்ற சமயத்தில் சுட்டிக்காட்டலாம். அப்போது உங்கள் தரப்பை உங்கள் கணவரோ, மனைவியோ புரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கும். குறைகள் இல்லாத மனிதர்களில்லை. ஆகவே, என் கணவர் இப்படித்தான், என் மனைவி இப்படித்தான் என்று புரிந்து, அந்த குறைகளுடன் அவர்களை மனந்திறந்து ஏற்றுக்கொள்ளுங்கள். காலப்போக்கில் உங்கள் எதிர்பார்ப்புக்கேற்றவராக அவர் மாற வாய்ப்பு உண்டு.

மனப்பான்மையை மாற்றுங்கள்:

'நான் இப்படித்தான்' என்று பிடிவாத மனப்பான்மையோடு இருந்தால், உங்கள் கணவருடன், மனைவியுடனான உறவு முறிந்து போவதற்கு வாய்ப்பு உண்டு. ஆகவே, இறுகிய மனப்பான்மையை கொண்டிருக்கவேண்டாம். திறந்த மனதோடு துணையை அணுகுங்கள். திறந்த மனம், நம்பிக்கையின் பிறப்பிடம். இருவரும் ஒருவரையொருவர் திறந்த மனதோடு அணுகும்போது, மனக்கசப்பு மறைந்து போகும். உறவு இனிதாய் தளிர்க்கும்.

முத்திரை குத்த வேண்டாம்:

'உன் குடும்பம் தெரியாதா?' 'உங்க அம்மா மாதிரி தானே நீயும் இருப்பே?' இந்த வகை முத்திரைகளை தவிர்த்துவிடுங்கள். உங்களை சிறந்தவராகவும், உங்கள் கணவர் அல்லது மனைவியை தரம் தாழ்ந்தவராகவும் முத்திரை குத்த வேண்டாம். அது எந்த வகையிலும் நன்மை செய்யப்போவதில்லை. குறிப்பிட்ட உறவினரை சுட்டிக்காட்டி, நீங்கள் அவர்போல பிடிவாதமானவர்; அக்கறையில்லாதவர் என்றெல்லாம் தேவையில்லாத ஒப்பீடுகளை செய்யவேண்டாம்.

பிரச்னையின் வேரை இனங்காணுங்கள்:

எவ்வகை சண்டையானாலும், பிணக்கானாலும் அதற்கு ஓர் ஊற்றுகண் இருக்கும். உங்கள் இருவருக்கும் பெரும்பாலும் எந்தக் காரணத்தினால் சண்டை உருவாகிறது என்பதை இனங்காணுங்கள். அந்தக் குறிப்பிட்ட சமயம் வரும்போது இதமான மனதோடு அதை அணுகுங்கள். பிணக்கு உருவாகும் இடத்தை அடையாளங் கண்டு, எச்சரிக்கையாக இருந்து விட்டால் சண்டை வருவதற்கு வாய்ப்பே இல்லாமல் போகும்.

கொஞ்சம் நெருங்கி செல்லுங்கள்:

வார்த்தைகள் தடித்து கசப்பு உருவாகி விட்டதென்றால் அப்படியே விட்டுவிடாதீர்கள். உறவை மீண்டும் உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். உங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்த உணவகத்திற்கு அல்லது கடைக்குச் செல்லலாம். கடற்கரைக்கோ இல்லையென்றால் நடைபயிற்சிக்கோ இணைந்து செல்லலாம். அந்த நெருக்கம், பழைய பிணக்கை இல்லாமல் ஆக்கிவிடும். பிறகு இன்பம் பொங்கும்.

You'r reading மனைவியுடன் சண்டையா... சரி செய்வது எப்படி? Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை