இசை, பல்வேறு சிறப்புகளை கொண்டது என்பது அனைவரும் அறிந்ததுதான். சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்று இசைக்கு இன்னொரு சிறப்பு இருப்பதையும் கண்டறிந்துள்ளது.
உயர்நிலை வகுப்புகள் பயிலும் மாணவர்கள், இசை கற்றால் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கில தேர்வுகளில் மற்ற மாணவர்களைக் காட்டிலும் சிறந்து விளங்குகிறார்கள் என்று கல்வி சார்ந்த உளநிலை குறித்த ஆய்விதழ் கூறுகிறது.
புறக்கணிக்கப்படும் இசை
பொதுவாக இசை போன்ற கல்வி தவிர்த்த பயிற்சிகளில் ஈடுபடும் மாணவர்கள் பாடங்களை படிப்பதற்கு போதிய நேரம் செலவழிக்காததால் குறைந்த மதிப்பெண்களே பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. பள்ளி நிர்வாகத்தினரும் இசை போன்ற கல்வி தவிர்த்த வகுப்புகளுக்கு ஆகும் செலவை குறைப்பதிலேயே குறியாய் இருப்பர்.
அதற்கும் இதற்கும் தொடர்பில்லை
ஆரம்ப வகுப்புகளில் இசை பயில ஆரம்பிக்கும் மாணவர்கள், உயர்நிலை வகுப்புகளில் அதை தொடரும்போது அவர்களது சமுதாய மற்றும் பொருளாதார பின்னணி, பாரம்பரியம், பாலின வேறுபாடு, கணிதம், ஆங்கிலம், அறிவியல் ஆகிய பாடங்களில் முன்னறிவு இவற்றோடு தொடர்பில்லாத வகையில் சிறந்து விளங்குவது தேர்வுகளின் வாயிலாக தெரிய வருகிறது என்று ஆய்வின் முதன்மை ஆய்வாளர் பீட்டர் கௌஸோஸிஸ் கூறுகிறார்.
2012 முதல் 2015ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் பொது பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ மாணவியரின் தரவுகளை பீட்டர் கௌஸோஸிஸின் குழுவினர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருந்தனர். கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கில பாடங்களை ஏதாவது ஒரு பொதுத் தேர்விலாவது எழுதியிருந்த 1,12,000 மாணவர்கள் சமுதாய பொருளாதார நிலை, பாரம்பரரியம், பாலினம் மற்றும் எண், எழுத்து திறனில் முன்னனுபவம் இவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டனர்.
வாத்திய இசை
குரலிசை மாணவர்களை காட்டிலும் கருவியிசை மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இசைக் குறிப்புகளை வாசித்தல், கண், கை மற்றும் மனம் இவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடு, கவனிக்கும் திறன் மேம்படுதல், குழு செயல்திறன் மேம்பாடு ஆகியவை இசை கற்பதால் கிடைக்கிறது. இதன் ஒட்டுமொத்த பலனாக, கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலத்தை கற்கும் திறனும் மேம்படுகிறது என்று உடன் ஆய்வாளர் மார்டின் குஹ்ன் கூறுகிறார்.
ஆரம்ப மற்றும் உயர்நிலை வகுப்புகளில் வாத்திய பயிற்சி பெறுவதற்கு மற்றும் இசை ஆசிரியர்களிடம் பயில வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால், இசைப்பயிற்சி பெறுவதும் குழுவாக இசை மீட்டுவது ஆகியவை கல்வியில் சிறந்து விளங்க உதவும் என்பதால், பள்ளிகளில் அதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்று முதன்மை ஆய்வாளர் பீட்டர் கௌஸோஸிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.