உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று பக்ரீத். இறை தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், இஸ்லாமிய மாதமான துல்ஹஜின் 10ஆம் நாள் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
இந்த பக்ரீத் நாளில் இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிடுகின்றனர். பலியிட்ட விலங்கின் இறைச்சியை மூன்று சம பங்குகளாகப் பிரித்து ஒரு பங்கை, அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு... மூன்றாவது பங்கை, அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
உலக முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி ஜூம்மா மசூதியில் நடந்த சிறப்பு தொழுகையில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். மற்றொரு இடத்தில் நடந்த தொழுகையில், மத்திய சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கலந்து கொண்டார்.
இதேபோல்,முக்கிய நகரங்களில் உள்ள புகழ்பெற்ற தர்கா, பள்ளிவாசல்கள், பொதுஇடங்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது, லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டு இறைவனை பிரார்த்தனை செய்தனர்.
தமிழகத்தில் மதுரை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கேரள மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்தனை செய்யப்பட்டது. தொழுகைக்கு பின்னர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட இஸ்லாமியர்கள், கேரள மக்களுக்காக நிதி திரட்டியதோடு, நிவாரணப் பொருட்களையும் சேகரித்தனர்.