கமலா ஹாரிஸ் வெற்றி.. திருவாரூர் கிராமத்தில் மக்கள் கொண்டாட்டம்..

Advertisement

அமெரிக்காவில் துணை அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதை அடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராம மக்கள் அதை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவ.3ம் தேதி நடைபெற்றது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்டு டிரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோபிடன் ஆகியோர் போட்டியிட்டனர். ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார். கமலா ஹாரிசின் தாயார் சியாமளா கோபாலன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரது தாய்வழி சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம். கமலாவின் தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள். இங்குள்ள தர்மசாஸ்தா கோயில்தான், அவரது குடும்பத்தினரின் குலதெய்வக் கோயிலாகும்.

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடன் தனது கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் என்று அறிவித்ததும், துளசேந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டுமென்று சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும், கிராமம் முழுவதும் கமலா ஹாரிஸ் வெற்றிபெற வாழ்த்து தெரிவிக்கும் பேனர்களை வைத்தனர். தற்போது அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று, கமலா ஹாரிஸ் துணை அதிபராக அறிவிக்கப்பட்டவுடன், அந்த கிராம மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர். அந்த கிராமம் மட்டுமின்றி, அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கமலா ஹாரிஸ் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். தெருக்களில் வண்ண, வண்ண கோலங்கள் போட்டும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தாலும் கமலா ஹாரீஸ் சென்னையை மிகவும் விரும்புபவர். சென்னைக்கு வரும்போதெல்லாம் தாத்தாவோடு கடற்கரையில் உலாவியதாகவும், இட்லி, தோசை போன்ற தமிழ்நாட்டு உணவு வகைகள் பற்றியும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisement
/body>