எழுத்தாணி - சாத்தூர் நிப்பு கம்பெனியின் கதை!

Advertisement

‘எழுத்து தெய்வம்.. இந்த எழுதுகோலும் தெய்வம்’ என்றான் மகாகவி பாரதி.

Nib

எழுதுகோல் தெய்வம் என்றால், அந்த எழுதுகோலுக்கான ‘நிப்பு’ உற்பத்திப் பண்ணுகிறவர்களை என்னவென்று அழைப்பது..?

அப்பாவிகள்.. ஏமாளிகள்... ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் என எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்.

ஆம்! தமிழகத்தின் தென் மாவட்டங்களுள் ஒன்றாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது, சாத்தூர். இந்த நகரத்தின் முக்கியத் தொழில்களாக சேவு தயாரித்தல், தீப்பெட்டித் தயாரித்தல், பட்டாசுத் தயாரித்தல் ஆகியவை உள்ளன. இவற்றில், பட்டாசும், சேவும் நாட்டின் பல்வேறு இடங்களில் தயாரிக்கப்பட்டாலும், பேனாவுக்குத் தேவையான ‘நிப்பு’ த் தயாரிப்பில் இந்திய அளவில் மிக முக்கியமான இடமாக ஒரு காலத்தில் சாத்தூர் இருந்துள்ளது என்பதும், இப்பகுதியில் உள்ள மக்களுக்கு இது முக்கியமான வாழ்வாதாரத் தொழிலாக இருந்துள்ளது என்பதும், எத்தனை பேருக்குத் தெரியும்?

பல ஆயிரக் கணக்கான மக்களுக்கும், இத்தொழிலை மட்டுமே நம்பியிருந்த நிப்புக் கம்பெனிகளின் உரிமையாளர்களுக்கும் இன்று அன்றாடம் சாப்பிட்டு வாழ்வதே ஒரு பெரும் போராட்டமாக மாறியுள்ளதை அவ்வளவு எளிதாக ஜீரணிக்க முடியவில்லை.

நிப்புத் தொழில் தொடங்கப்பட்ட வரலாறு

நிப்புத் தொழிலைப் பொறுத்தளவில், சாத்தூரில் 1950-ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டதாகும். இக்காலக் கட்டங்களிலில் இராஜகோபால ஆச்சாரி என்பவர், தன்னுடன் மேலும் சிலரையும் சேர்த்துக்கொண்டு,பேனா நிப்புத் தயாரிக்கிற தொழிலில் முதன் முதலாக ஈடுபட்டார். இவர் பித்தளையில்தான் முதலில் நிப்புகளைத் தயாரித்துள்ளார். பித்தளையில் நிப்புத் தயாரிப்பதால், ஊற்பத்திச் செலவுகள் அதிகமாக ஆனது, இதனால் சேலம் உருக்காலையிலிருந்து கழிவுத் தகடுகளை வாங்கிக்கொண்டு வந்து, அவற்றில் நிப்புத் தயாரித்தார்.

இத் தொழிலில் இவர் கண்ட வெற்றியைப் பார்த்து, அழகர்சாமி ஆச்சாரி என்பவரும் நிப்புத் தயாரிப்புத் தொழிலில் இறங்கினார். இவருடன், இவரது புதல்வாரன மனோகரன் ஆச்சாரியும், சகோதரர் வரதராஜ ஆச்சாரியும் இணைந்து இத்தொழிலை இன்னும் வேகமாக முன்னெடுத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து சுத்தியல் மற்றும் வெட்டிரும்பால் தகடுகளைத் துண்டாக்கி நிப்புத் தயாரித்த நிலையை மாற்றி, இதற்கென்றே கையால் இயக்கக்கூடிய இயந்திரத்தையும் உருவாக்கி, அதன் மூலமாக நிப்புகள் உற்பத்தியை அதிகரித்து, ராஜஸ்தானில் உள்ள நிப்பு வியாபாரி ஒருவருடன் சந்தைப் படுத்தும் தொடர்பை உண்டாக்கிக் கொண்டு அவருக்கு தாங்கள் தயாரிக்கிற நிப்புகளை விற்பனை செய்தனர்.

Nip

தொழில் விரிவாக்கம்!

இத் தொழிலில் நல்ல வருமானம் இருப்பது தெரியவே, இராஜகோபால் ஆசாரி மற்றும் அழகர்சாமி ஆச்சாரி ஆகியோரிடம் கூலிமுறையில் வேலை பார்த்து வந்த பெரும்பாலான தொழிலாளர்கள், அவரவர் தனித்தனியாக நிப்புத் தயாரிக்கிற இயந்திரத்தை வைத்து குடிசைத் தொழில் போல தனித் தனியாக தொழிலைத் தொடங்கினர்.

இதனால் வெறும் இரண்டாக இருந்த இந்த நிப்புக் கம்பெனிகளின் எண்ணிக்கை, வெகு சீக்கரமே 20 ஆக உயர்ந்தது. 1975 முதல் 1985 வரையிலான இந்தப் பத்தாண்டுக்கால இடைவெளியில் மொத்தம் 150 நிப்புக் கம்பெனிகள் சாத்தூரில் உருவாயின. இந்த 150 கம்பெனிகளில் 2000 க்கும் அதிகமான கூலித் தொழிலாளர்கள் வேலை பார்த்தனர்.இந்த அசுர வேக வளர்ச்சியின் காரணமாகவே இந்தப் பத்தாண்டுக் காலமும் ‘நிப்புத் தொழிலின் பொற்காலம் என்றுக் கணிக்கப்படுகிறது.

ஒரு பக்கம் நிப்புக் கம்பெனிகளின் உரிமையாளர்களுக்கு நாளுக்கு நாள் வருமானம் கூடிக்கொண்டே போக, மற்றொரு பக்கம், தொழிலாளர்களுக்கும் குறைவின்றிக் காசு புழங்கும் தொழிலாய் இருந்தது. நாள் ஒன்றுக்கு இரண்டு ‘ஷிஃப்ட்’ இராப்பகலாக வேலை பார்த்து, தினமும் 500 ரூபாய வரையில் அப்போதே இரட்டிப்பாகக் பெற்றனர்.

இத் தொழில் இங்குத் துவக்கப்பட்டக் காலக்கட்டங்களில், 144 எண்ணிக்கை கொண்ட நிப்பு ஒரு ‘குரோஸ்’ என நிர்ணயம் செய்யப்பட, குரோஸ் ஒன்றுக்கு 25 பைசா எனவும் கூலி நிர்ணயம் செய்யப்பட்டது. அடுத்தடுத்தக் காலக்கட்டங்களில், ஒரு ரூபாய், ஒன்றரை ரூபாய், இரண்டு ரூபாய் என உயர்ந்ததுடன், இதில் ஈடுபட்டோருக்கு, மதிப்புமிக்கத் தொழிலாகவும் மாறியது. இதனால் ஆர்வத்துடன் பணியில் ஈடுபட்டத் தொழிலாளர்கள், நாள் ஒன்றுக்கு 35 முதல் 40 குரோஸ் வரையில் உற்பத்தித் திறனையும் கூடுதலாக்கினர். தொழிலாளர்களுக்கு நிர்வாகம் வாரம் ஒரு முறை கூலி தந்தது. ஏற்கனவே இப்பகுதியில் செயல்பட்டுவந்த சேவு உற்பத்தி மற்றும் தீப்பெட்டித் தொழிலுக்கு இணையான தொழிலாக இந்த நிப்பு உற்பத்தித் தொழில் மாறியது.

இதனால் மக்கள் மத்தியில் தாராளமாக பணப் புழக்கம் உண்டாக, ஏராளமான பெட்டிக் கடைகள், ஜவுளிக்கடைகள், ஓட்டல்கள் என வேறு தொழில்களின் வளர்ச்சியும், வேலை வாய்ப்பும், இதன் மூலம் தனி மனிதப் பொருளாதார அந்தஸ்தும் சாத்தூர் நகரத்தில் ஏற்பட்டது.

Nib worker

இடைத் தரகர்கள்

வெளி மாநிலங்களில்-குறிப்பாக, கொல்கத்தாவில் உள்ள நிப்பு மற்றும் பேனாக் கம்பெனிகளின் உரிமையாளர்கள், சாத்தூரில் உற்பத்தியாகிற நிப்புகளை வாங்கி தங்களுக்கு அனுப்புவதற்காகவே ‘ஏஜெண்டுகள்’ எனப்படுகிற இடைத்தரகர்களை நியமித்தனர். இவர்கள், சாத்தூர் மற்றும் மதுரையிலேயே தங்கியபடி, இத்தொழிலில் செயல்பட்டும் வந்தனர். இவர்களுக்கு இடைத் தரகுத் தொழில் மூலமாக லட்சக் கணக்கில்கூட வருமானம் கிடைத்தது.

இது ஒரு புறமிருக்க, குரோஸ் ஒன்றுக்கு 144 நிப்புகள் என வாங்குகிற இந்த இடைத்தரகர்கள், தங்களை வேலைக்கு நியமித்திருக்கிற வெளி மாநில பேனாக் கம்பெனி உரிமையாளர்களிடம், குரோஸ் ஒன்றுக்கு 100 நிப்புகள் என்றே கணக்குச் சொல்லி, மீதமுள்ள 44 நிப்புக்கான பணத்தையும் தாங்களே வைத்துக் கொண்டார்கள். இவ்வாறு மறைமுகமாகவும் இவர்கள் அதிகளவுக்கு காசு பார்த்தனர்.

“எந்த விதமான உழைப்பும் இல்லாமெ, என்னைப்போல இருக்குற நிப்புக் கம்பெனி உரிமையாளர விடவும், அதிகமான வருமானம் பாக்குறது, இந்த இடைத் தரகுக்கார சேட்டுங்கதான், தொழில் நல்லா நடந்திட்டு இருந்தப்போ இப்டி நிறைய சேட்டுங்க இங்க இருந்தாங்க.” என்கிறார் ‘நல்லமுத்து நிப்புக் கம்பெனி’யின் உரிமையாளரான திரு. தங்கப் பாண்டியன். குரலிலும், முகத்திலும் இழப்பின் வலி நிறையவே தெரிகிறது.

சங்கங்கள் உதயம்!

இவ்வாறு, சாத்தூரின் பொருளாதாரச் சுழற்சியைத் தீர்மானிக்கக்கூடிய தொழிலாக நிப்புத் தொழில் மாறிக் கொண்டிருக்க, நிப்புக் கம்பெனி உரிமையாளர்கள், 1986 ஜீன் மாதம் 16 ஆம் நாளன்று ‘அறிஞர் அண்ணா நிப்பு உற்பத்தியாளர் சங்கம்’ என்றப் பெயரில் அமைப்பு ஒன்றைத் தொடங்கினர். இதற்கு, பிச்சை என்பவர் தலைவராகவும், சங்கர நாராயணன் என்பவர் செயலாளராகவும், தங்கப் பாண்டியன் என்பவர் பொருளாளராகவும் ஆக்கப்பட்டனர்.

அதே போல, அடுத்தடுத்தக் காலக் கட்டங்களில், நிப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனை முன் வைத்து ‘சாத்தூர் நிப்பு உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்’ என்றப் பெயரில் அரசு சார்பில் அமைப்பு ஒன்று ஆரம்பிக்கப்ட்டது. இச் சங்கம் சில வருடங்கள் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில், 1980 ஆம் ஆண்டு முதல் செயல்பாடின்றி நின்றும் போனது.

Nib worker

அதே போல, சாத்தூர் நிப்புத் தொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கம் என்றப் பெயரில் அமைப்பு ஒன்றும் தொடங்கப்பட்டு, சில ஆண்டுகள் மட்டுமே இது செயல்பட்டு வந்த நிலையில், இதுவும் முடங்கிப் போனது. இந்தச் சங்கம் செயல்பட்டபோது, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும்கூட தொழிலாளர்களுக்கு ஊதியம் தரப்பட்டு வந்தது.

‘பால் பாயிண்ட் பேனா’வின் வரவும்.. நிப்பு உற்பத்தியின் நசிவும்!

தொடர்ந்து ஏறுமுகமகாவே நடந்துகொண்டிருந்த நிப்புத் தொழிலுக்கு சிம்ம சொப்பனம் போல அறிமுகானது, மனித மூளையின் மற்றொரு கண்டுபிடிப்புப் பரிமாணமான ‘பால் பாயிண்ட்’ என்றழைக்கப்படுகிற பந்து முனை பேனா.

1990 களில் அறிமுகமான இப்பேனா, மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றது. கருப்பு, பச்சை, மஞ்சள், சிவப்பு என பல வண்ணங்கில் சட்டைப் பைகளை அலங்கரிக்கத் தொடங்கின பால் பாயிண்ட் பேனாக்கள்.

படிப்படியாக நிப்புப் பேனாவை வாங்கும் ஆர்வம் குறைந்து கொண்டே வர, பால் பாயிண்ட் பேனாவின் மேல் மக்களின் மோகமும், அதன் உற்பத்தி மற்றும் விற்பனையும் அமோகமாய் மாறியது, பேனா நிப்புத் தொழிலின் மீது பெரிய மரண இடியாய் இறங்கியது.

சுமார் 200 க்கும் மேற்பபட்ட நிப்புக் கம்பெனிகள் இயங்கி வந்த சாத்தூரில் 150, 100, 50 என ‘மலமல’வென்றுச் சறிந்து, தற்போது வெறும் 4 கம்பெனிகளாகக் குறைந்து, சுவடின்றி அழிந்து போகிற துயரத்தில் விசும்பிக் கொண்டிருக்கிறது இத் தொழில்!

பேனா நிப்புத் தொழில், குடிசைத் தொழிலாகவே அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், சிறு தொழிலுக்கான மானியக் கடன்களைக்கூட அரசு வழங்குவதில்லை. அதே போல உற்பத்தி செய்யப்படும் நிப்புக்களை கழுவிச் சுத்தம் செய்வதற்காக தேவைப்படும் மண்ணெண்ணெய் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. இதை ‘ரேஷன்’ முறையில் அதற்குரிய குறைந்தளவு விலை வைத்துத் தரும்படி அரசாங்கத்திடம் நெடுங் காலமாகக் கோரிக்கை வைத்தும், இதுவரையில் கண்டு கொள்ளப்படவேயில்லை.

Nib workshop

பேபி மாடல், 2 ஆம் நம்பர் நிப்பு, 3 ஆம் நம்பர் நிப்பு, 4 ஆம் நம்பர் நிப்பு, ஐந்தரை நம்பர் நிப்பு, உருண்டை நிப்பு, ஆர்ட் நிப்பு எனப் பல விதமான வடிவங்களில் சாத்தூரில் உற்பத்தி செய்யப்படும் நிப்புத் தொழிலுக்கு இப்போது மூச்சுக் காற்றாக இருப்பது, உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட சில வட மாநிலங்களும், நேபாளமும்தான்! காரணம், இவ்விடங்களில் மழைக் காலங்களில் பால் பாயிண்ட் பேனாக்களில் நிரப்பப்பட்டிருக்கும் மையானது, உறைந்துவிடும் என்பதால், இப்பேனாக்களுக்குப் பதிலாக, நிப்புப் பேனாக்களே பெரும்பாலானோரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இடம் பெயர்ந்துவிட்ட உரிமையாளர்கள்

சரியான அளவுக்கு வருமானம் இல்லாததால், இடைத் தரகர்களான சேட்டுகளிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கி திரும்பச் செலுத்த முடியாமல் ஏராளமான நிப்பு உற்பத்திக் கம்பெனி உரிமையாளர்கள், கடன் தந்தோரிடமே தங்களது கம்பெனி, வீடு என எலாவற்றையும் விற்று கடனை அடைத்துவிட்டு, பிழைப்புத் தேடி ஊரையே காலி செய்து விட்டுப் போனத் துயரங்கள்கூட உண்டு.

• ஓய்வூதியம் இல்லை.

• சரியான ஊதியம் இல்லை

• மருத்துவச் சலுகைகள் இல்லை

• அரசின் ஆதரவோ, ஊக்குவிப்போ இல்லை

Nib worker

என ஏராளமான ‘இல்லை’களால் பெரும் தொல்லைகளுக்கு உள்ளாகி, அன்றாட ஜீவனப் பட்டிற்கே விழி பிதுங்கிக் கிடக்கிற நிப்புத் தொழிலின் தொழிலாளர்கள் மற்றும் உரிரையாளர்கள், பரிதாப நிலையைப் பார்த்து இளைஞர் எவரும் இத் தொழிலில் ஈடு படுவதற்கு முன்வருவதேயில்லை. இப்போது இத் தொழிலில் உழைத்து வருகிற சொற்பத் தொழிலாளர்களிலும் பெரும்பாலாலானோர், 50 வயதைக் கடந்தவர்களாகத்தான் இருக்கின்றனர்.

நாட்டின் பாரம்பரிய அடையாளங்களைப் புதுப்பித்துப் பாதுகாத்து வருவதாகப் பீற்றிக் கொள்கிற மைய, மாநில அரசுகள், ஒரு காலத்தில் சாத்தூர் பகுதி சாதாரண மக்களின் முக்கிய வாழ்வாதராரமாயிருந்து, தற்போது குற்றுயிரும், குலையுயிருமாக அழிவின் விழிம்பில் நிற்கிற இந்த பேனா நிப்புத் தொழிலுக்கு புத்துயிர் தந்து, அதைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது எல்லோரது எதிர்பார்ப்பு!.

- அல்லிநகரம் தாமோதரன்

Advertisement
மேலும் செய்திகள்
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
what-are-the-benefits-of-using-some-kitchen-ingridents-in-tamil
வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருள்களை வைத்து ஃபேஷியல் செய்வது எப்படி??
what-are-the-disadvantage-for-girl-while-eating-red-meat
பெண்கள் ஏன் அதிகமாக இறைச்சி எடுத்துக்க கூடாது தெரியுமா?? வாங்க தெரிந்து கொள்ளலாம்..
relationship-these-are-the-most-googled-questions-about-sex
பாலியல் உறவு குறித்து கூகுள் இணையத்தில் தேடப்பட்ட அதிக கேள்விகள்
details-about-world-virus-impact
விலங்கியல் நோய்களால் 3.25 கோடி மக்கள் உயிரிழப்பு... என்னதான் தீர்வு?!
what-are-the-benefits-in-child-growth
குழந்தைகள் உயரமாக வளர இந்த டிப்ஸ்யை பயன்படுத்துங்கள்..
how-to-cure-belly-in-tamil
இனி தொப்பையை குறைப்பது வெரி ஈஸி!! இதை செய்தால் மட்டும் போதுமாம்..
what-are-the-benefits-of-drinking-beetroot-juice
தினமும் பீட்ருட் சாறு குடிப்பதால் உடலுக்கு எவ்வகை ஆரோக்கியம் கிடைக்கும்??
what-are-the-symptoms-of-corona-virus
இந்த அறிகுறி இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு அந்த நோய் தான்!! நூறு சதவீதம் உறுதி..
/body>