ஆந்திராவில் ஒருவருக்கு விற்கப்படும் மதுபான பாட்டில்களின் எண்ணிக்கையை அம்மாநில அரசு குறைத்துள்ளது. அதாவது, பிராந்தி, விஸ்கி என்றால் 3 பாட்டில்கள், பீர் என்றால் 6 பாட்டில்கள் மட்டுமே ஒருவருக்கு விற்கப்படும்.
ஆந்திராவில் விஸ்கி, பிராந்தி, ஜின் போன்ற இந்தியாவில் தயாராகும் அயல்நாட்டு மதுபானங்கள்(ஐ.எம்.எப்.எல்) விற்பனை கடைகளை தனியாரே நடத்தி வருகின்றனர். அம்மாநிலத்திலும் கேரளா, தமிழ்நாடு போல்் குடி மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதால், மதுபானங்களின் விற்பனையை கட்டுப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதிலும். சமீபத்தில் பதவியேற்றுள்ள முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின் போது விரைவில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். அதனால், தற்போது அவரது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. கலால் துறை கூடுதல் செயலாளர் சாம்பசிவ ராவ் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.
அதன்படி, ஒருவர் மதுபானக் கடைக்கு சென்று பிராந்தி, விஸ்கி போன்றவை வாங்கினால் அதிகபட்சமாக 3 பாட்டில்கள் மட்டுமே தரப்படும். அதுவே பீர் என்றால் 6 பாட்டில்கள் வாங்கிக் கொள்ளலாம். இது வரை, பிராந்தி, விஸ்கி என்றால், 6 பாட்டில்களும், பீர் என்றால் 12 பாட்டில்களும் வாங்க அனுமதிக்கப்பட்டு வந்தது. பிராந்தி, விஸ்கி போன்றவை குவார்ட்டர் என்றாலும் புல் என்றாலும் பாட்டில் எண்ணிக்கை கணக்குதான்.
இந்த கட்டுப்பாட்டை அமல்படுத்துவது சாத்தியமா என்று கலால்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ஓரளவுக்கு சாத்தியமாகிறது.
இந்த விதிப்படி ஒருவர் காலையில் 3 பாட்டில்கள் வாங்கி விட்டு, அதில் ஒன்றை குடித்து விட்டிருந்தால் மீண்டும் சென்று ஒரு பாட்டில் வாங்கிக் கொள்ளலாம். அதாவது, எப்போது ஒருவரை சோதனையிட்டாலும் 3 பாட்டில் அளவுக்கு மேல் வைத்திருந்தால் வழக்கு போடப்படும். இதில் ஓரளவுக்கு குடிப்பது குறைக்கப்படும்.
மேலும், புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு 20 சதவீத மதுபானக் கடைகளை குறைத்திருக்கிறோம். அடுத்த கட்டமாக, தமிழகத்தில் அரசு நிறுவனமான டாஸ்மாக் நிறுவனமே சில்லரை மதுபானக் கடைகளை நடத்துவதுபோல், ஆந்திராவிலும் அரசே நேரடியாக சில்லரை மதுபானக் கடைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அனேகமாக, அக்டோபர் முதல் அது அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.