கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருக்கு அக்டோபர் 1ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக காங்கிரசில் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தவர் டி.கே.சிவக்குமார். இவர்தான் குஜராத் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்தவர். அதே போல், கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியைக் காப்பாற்ற போராடியவர். ஒரு வழியாக, அந்த ஆட்சியை கவிழ்த்த பாஜக, அங்கு எடியூரப்பா தலைமையில் ஆட்சியமைத்தது.
அதைத் தொடர்ந்து, பல கோடி ரூபாய் சட்டவிரோத பணபரிமாற்றம் செய்ததாக குற்றம்சாட்டி, சிவக்குமாரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். சிவக்குமாரின் 22 வயது மகள் ஐஸ்வர்யாவுக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியுள்ளது.
டெல்லியில் அமலாக்கத் துறை அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டிருந்த சிவக்குமாரை கடந்த வாரம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அரசு தரப்பில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் கே.எம்.நடராஜ் ஆஜராகி, சிவக்குமார் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் 317 வங்கிக் கணக்குகளை ஆராய வேண்டியுள்ளது. சிவக்குமார் பல்வேறு சட்டவிரோத பரிமாற்றங்களை செய்துள்ளார். ரூ.200 கோடி பரிமாற்றங்கள் நடந்துள்ளது. அதே போல், அவரது 22 வயது மகள் ஐஸ்வர்யா ரூ.108 கோடிக்கு வங்கி பரிமாற்றம் செய்திருக்கிறார். எனவே, சிவக்குமாரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.
அதனால், அவரை மேலும் 5 நாள் காவலில் வைக்க அனுமதிக்க வேண்டும் என்றார். இதை ஏற்ற நீதிபதி அஜய்குமார் குஹார், காவலில் இருக்கும் சிவக்குமாரை தினமும் அவரது குடும்பத்தினர் அரை மணி நேரம் சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும். டாக்டரை சந்திக்கவும், மருந்து, மாத்திரைகள் தரவும் அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், சிவக்குமாருக்கு காவல் முடிந்து நேற்று மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு ஜாமீன் கோரப்பட்டது. இதை நீதிபதி அஜய்குமார் குஹார் ஏற்கவில்லை. சிவக்குமாரை மேலும் 14 நாள்கள், அதாவது அக்டோபர் 1ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். சிவக்குமாரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்து, அவர் உடல்நிலை நன்றாக இருந்தால் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.