அட்வாண்ஸ்டு மொபைல் , லட்ச ரூபாய் செலவில் இரு சக்கர வாகனம் என வாழ்க்கை நெடுஞ்சாலை பயணங்களை போல ஓடிக்கொண்டு இருந்தாலும் ஒரு கட்டத்தில் சேமிப்பின் உண்மைத்தன்மையையும் அதன் தேவையையும் ஒரு அசாதாரண சூழல் தான் நமக்கு உணர்த்தும். அந்த வகையில் வாழ்க்கையை EMI கட்டவே வாழ்ந்து கொண்டிருந்த அனைவரையும் சற்று நிதானமாகவும் , ஆழமாகவும் யோசிக்க வைத்தது இந்த pandemic disease #covid-19 .
இந்த நோயின் தாக்கத்தால் பொருளாதார வகையில் அனைவரும் மிகப்பெரிய இழப்பை சந்தித்து உள்ளோம். இந்த தருணத்தில் சேமிப்பின் அவசியத்தை அனைவரும் உணர்ந்துள்ளனர். அந்த வகையில் சேமிப்பில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் திட்டம்தான் அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டம். அத்திட்டம் பற்றியும் அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதும் பற்றியும் இக்கட்டுரையில் காண்போம் .
அஞ்சலக சிறுசேமிப்பு திட்டம்
இந்திய அஞ்சல் துறையில் பலவகையான சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ரெக்கரிங் டெபாசிட் (recurring deposit ) எனப்படும் சிறு சேமிப்பு திட்டம் பயன்தரும்.
சீட்டு கம்பெனிகளோடு ஒப்பிடும்போது, அஞ்சலக சேமிப்பு, மிகச்சிறந்த சிறுசேமிப்பாகும். 5 ஆண்டுகள் பணம் செலுத்த வேண்டும். செலுத்தும் பணத்திற்கோ பாதுகாப்பும், வட்டியும் கிடைக்கும். மாதந்தோறும் சிறியத் தொகையை செலுத்தி, பெரும் தொகையை முதிர்வுத்தொகையாகப் பெறலாம்.
தகுதி
தனிநபர் யாவரும் இந்தத்திட்டத்தில் டெபாசிட் செய்து சிறுசேமிப்புக் கணக்கைத் தொடங்க இயலும். யார் பெயரில் சேமிப்பு தொடங்கப்படுகிறதோ, அவரே இதனைத் தொடங்க வேண்டும். தம்பதியினர், சகோதரர்கள், நண்பர்கள் விரும்பினால் சேர்ந்து, கூட்டுக் கணக்கும் தொடங்க முடியும்.
ஏற்கனவே சேமிப்புக்கணக்கு தொடங்கியிருப்பவர்கள் விரும்பினால், தனிநபர் சேமிப்புக்கணக்கை, கூட்டு சேமிப்பாகவும் மாற்றிக்கொள்ளலாம். அதேபோன்று கூட்டு சேமிப்பை, எப்போது வேண்டுமானாலும், தனி சேமிப்பாக மாற்றிக்கொள்ளலாம்.
குறைந்த பட்ச சேமிப்பு
இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் மாதம் 100 ரூபாய் சேமிக்கலாம். அதிகபட்சமாக, 10ன் மடங்காக, அதற்கு மேல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் சேமிக்க முடியும். அதற்கு உச்ச வரம்பு கிடையாது.
வட்டி விகிதம்
ஆர்டி சேமிப்பை 5 ஆண்டுகள் கட்டவேண்டியது கட்டாயம். அதைவிடக் குறைந்த வருட சேமிப்பு கிடையாது. ஒவ்வொரு காலாண்டிற்கும் கணக்கிட்டு வட்டி வழங்கப்படும். தற்போதைய நிலவரப்படி ஆண்டிற்கு 5.8 சதவீதம் வட்டி அளிக்கப்படுகிறது. இது இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அளிக்கப்படும் வட்டி விகிதம். ஒவ்வொரு காலாண்டிற்கும் மத்திய அரசு வட்டிவிகிதத்தை மாற்றி அறிவிக்கும்.
நிபந்தனைகள்
மாதா மாதம் சேமிப்புத் தொகையைச் செலுத்தாவிட்டால், தவறிய தவணைத் தொகைக்கு ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ச்சியாக 4 தவணைகளைக் கட்டத் தவறினால், உங்கள் சேமிப்புக் கணக்கு முடக்கப்படும். ஒருவேளை அவ்வாறு முடக்கப்பட்டாலும், அடுத்த இரண்டு மாதங்களில் மீண்டும் சேமிப்புக்கணக்கைத் தொடரும் வசதியும் உண்டு.
நாம் சேமிக்கும் பணத்தை சரியான திட்டத்தில் செலுத்தி, அதிக முதிர்வுத்தொகையைப் பெற வேண்டும் என்பதே நம் அனைவருடைய தேடல். அதற்கு அஞ்சலக சிறுசேமிப்பு சரியானத் தேர்வு.