ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துகிறீர்களா? இவை உங்களுக்குத்தான்...

by SAM ASIR, Mar 11, 2021, 20:29 PM IST

ஆண்ட்ராய்டு இயங்குதளம் உலகம் முழுவதும் பிரபலமானது. அதில் இயங்கும் சாதனங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஆகவே மோசடி பேர்வழிகள், விளம்பரதாரர்கள், ஆன்லைன் கொள்ளையர்களும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை குறி வைக்கிறார்கள். தொடர்ந்து நமக்கு விளம்பரங்களைக் காட்டி பணத்தை சம்பாதிக்கும் எத்தனையோ செயலிகள் உள்ளன. இவை ஸ்மார்ட்போனில் இயங்கும்போது போனின் வேகம் குறைகிறது. சில செயலிகள் ஸ்மார்ட்போனுக்குள் மறைந்திருந்து நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்பதையெல்லாம் கூட மற்றவர்களுக்கு கொண்டு போய் சேர்க்கும். ஆகவே, ஆண்ட்ராய்டு பயனர்கள் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம்.

ஸ்ட்ராங்க் பாஸ்வேர்டு
ஸ்மார்ட்போன்களை பொறுத்தமட்டில் இப்போது கடவுச்சொல் (password) கிட்டத்தட்ட பயன்பாட்டில் இல்லை என்றே சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு ஃபிங்கர்பிரிண்ட் (விரல்ரேகை), ஃபேஸ் அன்லாக் (முகமறி கடவுச்சொல்) இவை பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. ஃபேஸ் அன்லாக், ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் வடிவம் (pattern) இவற்றை மட்டுமல்ல, நான்கு இலக்க இரகசிய குறியீடுகளை கூட ஆன்லைன் கொள்ளையர்கள் தாண்டி விடுவர். அதற்காக உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வித்தியாசமான எழுத்துகள் மற்றும் குறியீடுகளைக் கொண்ட கடினமான கடவுச்சொல்லை உருவாக்குவது பாதுகாப்பானது.

ஆன்ட்டிவைரஸ் செயலி
ஸ்மார்ட்போன் இணையத்தோடு தொடர்பு கொள்கிறது; தீங்கு செய்யக்கூடிய அநேக செயலிகள், நிரல்கள் (மால்வேர்) தாக்கக்கூடும் என்பது நன்றாகவே தெரிந்தும் யாரும் ஆன்ட்டிவைரஸ் செயலியை பயன்படுத்துவதில்லை. ஸ்மார்ட்போனில் ஏற்கனவே இருக்கக்கூடிய பாதுகாப்பு, புதிய வகை வைரஸ்களை தடுப்பது கடினம். ஆகவே, கட்டணம் செலுத்தி பெறக்கூடிய ஆன்ட்டிவைரஸ் செயலியை பயன்படுத்துங்கள். அவை மால்வேர் மற்றும் ஸ்பைவேர் தாக்கும்போது உங்களை எச்சரிப்பதோடு ஸ்மார்ட்போனையும் பாதுகாக்கும்.

மூன்றாம் நபர் செயலிகள்
ஸ்மார்ட்போனின் செட்அப் பகுதியில் அறிமுகமில்லாத செயலிகள் தரவிறக்கம் செய்யப்படுவதை தடுத்து (ஆஃப்) வைப்பது நல்லது. இது உங்களுக்குத் தெரியாமல் கூகுள் பிளே அல்லாத இடங்களிலிருந்து செயலிகள் நிறுவப்படுவதை தடுக்கும்.

ஆண்ட்ராய்டு அப்டேஷன்
உங்கள் ஸ்மார்ட்போன் இயங்கக்கூடிய இயங்குதளத்தின் அடுத்தக் கட்டம் வெளியாகியுள்ளதை பற்றிய தகவல்களை அலட்சியம் செய்யவேண்டாம். இந்த மேம்படுத்தப்பட்ட இயங்குதள வடிவத்தை நிறுவுவதற்கு சற்று நேரமே தேவைப்படும். ஆனால், பல மால்வேர் தாக்குதல்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.

ஏபிகே ஃபைல்கள்
ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் பேக்கேஜ் எனப்படும் ஏபிகே ஃபைல்கள் எப்படி இயங்குகின்றன என்பதைக் குறித்து முழுவதுமாக அறியாவிட்டால் அவற்றைப் பயன்படுத்தி செயலிகளை தரவிறக்கம் செய்யவேண்டாம். கூகுள் பிளேயிலிருந்து மட்டுமே செயலிகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள். கூகுள் பிளேவில் இல்லாத சில செயலிகளை ஏபிகே ஃபைல் மூலம் தரவிறக்கம் செய்யவேண்டியது அவசியமாயிருக்கிறது. ஆனால், அவற்றின் மூலம் தீமை விளையக்கூடும்.

செயலிகளின் நிபந்தனைகள்
பல நேரங்களில் செயலிகள் கேட்கும் தேவையற்ற அனுமதிகளை நாம் தருகிறோம். அவை தகவல்களை நம்மிடமிருந்து திருடுவதற்கு பயன்படும். ஆகவே எந்தச் செயலியையும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முழுவதுமாக வாசிக்காமல் தரவிறக்கம் செய்யவேண்டாம். எடுத்துக்காட்டாக, வால்பேப்பர் தொடர்பான செயலிக்கு உங்கள் தொடர்பு பட்டியல் மற்றும் ஒலிவாங்கி (மைக்) இவற்றுடன் செயல்பட அனுமதி தேவையில்லை. இதுபோன்று தேவையில்லாத அனுமதிகளை நிபந்தனைகள் வாயிலாக புகுத்தும் செயலிகளை புறக்கணியுங்கள்.

திருட்டிலிருந்து பாதுகாப்பு
புதிதாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியதுமே கூகுளின் ஃபைண்ட் டிவைஸ் சேவையை செயல்படுத்துங்கள். இது உங்கள் போன் திருடப்பட்டாலும் கண்டுபிடிக்க உதவும். பாஸ்வேர்டு இல்லாமல் மொபைல் டேட்டா பயன்பாட்டை நிறுத்தவோ, போனை ஸ்விட்ச்ஆஃப் செய்யவோ முடியாதபடி செட்டிங்ஸ் பகுதியில் ஏற்பாடுகள் செய்யுங்கள்.

சார்ஜர்
இப்பொழுது 5000 mAh திறன் கொண்ட பேட்டரி வருகிறது. அவற்றை சாதாரண சார்ஜர்களில் பயன்படுத்தவேண்டாம். செல்லுமிடமெல்லாம் கிடைக்கும் அடாப்டர்களில் சார்ஜ் செய்வதை தவிர்க்கவும். உங்கள் போனுக்கு ஏற்ற அடாப்டர்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

பேக்அப்
உங்கள் ஸ்மார்ட்போனிலுள்ள முக்கியமான தகவல்களை பேக்அப் செய்வது முக்கியம். போன் எதிர்பாராமல் திருட்டு போகலாம்; தொலைந்து போகலாம் அல்லது பழுதடையலாம். ஆகவே, தகவல் இழப்பை தவிர்க்க ஸ்மார்ட்போனிலுள்ள தகவல்களை பேக்அப் செய்து வைப்பது நல்லது.

டவுண்லோடு
செட்டிங்ஸில் உள்ள தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளின் பட்டியலை (டவுண்லோடட் ஆப்) பார்ப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அநேக மால்வேர்கள், ஸ்பைவேர்கள் ஐகான் உருவாக்கமலே மறைந்திருக்கும். முழு தரவிறக்க பட்டியலையும் பார்க்கும்போது அறிமுகமில்லாத செயலிகளை கண்டுபிடிக்க முடியும்.

பழைய செயலிகள்
பயன்படுத்தப்படாத மற்றும் பழைய செயலிகளை ஸ்மார்ட்போனில் அப்படியே விட்டுவைக்கவேண்டாம். பயன்படுத்தவில்லையென்றால் அவற்றை அழித்துவிடவும். பழைய செயலிகள் இடத்தை அடைப்பதோடு தீமை செய்யக்கூடிய கோப்புகள் (மால்வேர்) இறங்கவும் உதவியாக அமைந்துவிடக்கூடும்.

கூகுள் அக்கவுண்ட்
கூகுள் கணக்கின் பாஸ்வேர்டை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும். இது உங்கள் தனியுரிமை மீறப்படாமல் இருக்க உதவும்.

கேச் மெமரி
நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் செயலிகள் cache memoryஐ அவ்வப்போது சுத்தம் செய்வது ஸ்மார்ட்போன் வேகமாக செயல்பட உதவும்.

புளோட்வேர்
புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கியதும் அதில் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் செயலிகள், மென்பொருள்களில் தேவையில்லாவற்றை அழித்துவிடவும். அவை இடத்தை அடைத்துக்கொண்டிருப்பதோடு ஸ்மார்ட்போன் இயங்குதளத்தில் நிலைத்தன்மையையும் பாதிக்கும்.

சுவிட்ச் ஆஃப்
ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அதிக அளவு மின்னாற்றலை தேக்கக்கூடிய மின்கலங்களை கொண்டுள்ளன. எனவே, அவற்றை நாம் ஆஃப் செய்யாமல் பயன்படுத்தி வருகிறோம். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ஆஃப் செய்து பின் ஆன் செய்து பயன்படுத்துவது நல்லது.

You'r reading ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துகிறீர்களா? இவை உங்களுக்குத்தான்... Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை