கோடைக்காலத்தில் சிறுநீரகங்களை பாதுகாப்பது எப்படி?

by SAM ASIR, Mar 11, 2021, 20:30 PM IST

கோடைக்காலம் எட்டிப் பார்க்கும் மாதம் மார்ச். இம்மாதத்தின் 11ம் தேதி உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது. கோடையில் தண்ணீர் பருகுவது அவசியம். நீருக்கும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு போதுமான நீர் பருகவேண்டிய கோடையில், சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பேணுவது எப்படி என்று காணலாம். அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், சிறுநீரின் நிறம் மாறுதல், சிறுநீரில் நெடி வீசுதல், சிறுநீரில் நுரை காணப்படுதல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுதல், கண்களைச் சுற்றி வீக்கம், பெலவீனம், அசதி, குமட்டல், வாந்தி பண்ணும் உணர்வு, சருமம் வறண்டு அரிப்பு ஏற்படுதல், ஹீமோகுளோபின் குறைதல், திடீரென உயர் இரத்த அழுத்தம் ஏற்படுதல், முதுகு வலி அல்லது அடிவயிற்றில் வலி ஆகியவை சிறுநீரக பாதிப்புக்கான சில அறிகுறிகளாகும். உடலின் நீர்ச்சத்து என்பது வெறுமே தண்ணீர் பருகுவதை மட்டுமே குறிக்காது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உடலின் சமநிலையை பராமரிக்க இரண்டு சிறுநீரகங்களுமே நன்றாக வேலை செய்ய வேண்டும்.

நீர்ச்சத்து அதிகமான உணவு
கோடைக்காலத்தில் அதிகமாக வியர்வை வெளியேறும். உடலில் போதுமான நீர் இல்லாவிட்டால் சிறுநீரகத்தில் கல் உருவாகிறதற்கான வாய்ப்பு ஏற்படும். முதியவர்கள் மற்றும் சிறுபிள்ளைகளுக்கு போதிய நீர்ச்சத்து இல்லாவிட்டால் சிறுநீரகத்தில் காயம் ஏற்படலாம். ஒரு நாளைக்குக் குறைந்தது 10 முதல் 12 தம்ளர் நீர் பருகுவது அவசியம். மேலும் நீர்ச்சத்து அதிகமான வெள்ளரி, தர்பூசணி போன்றவற்றை சாப்பிடுவதும் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை அளிக்கும்.

குறைவான உப்பு
அளவுக்கு அதிகமான உப்பை நாம் சேர்த்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை பாதிக்கும். சாதாரணமாக தினமும் 7 முதல் 10 கிராம் உப்பு சேர்க்கிறோம். அதை 4 முதல் 5 கிராம் என்ற அளவுக்கு குறைத்துக்கொள்வது நலம். தீவிர சிறுநீரக பாதிப்பு, இதய பாதிப்பு, உயர் இரத்த அழுத்தம் இருப்போர் அதிக உப்பு சேர்த்தால் சிறுநீரகத்தில் கல் உருவாகக்கூடும்.

நார்ச்சத்து
செரிமானத்திற்கு மட்டுமே நார்ச்சத்து உதவுவதில்லை. சிறுநீரகத்தின் செயல்பாட்டுக்கும் அதுத உதவி செய்கிறது. தீவிர சிறுநீரக நோய்கள் இருப்போர் அதிக நார்ச்சத்து சாப்பிடுவது நலம். பீன்ஸ்,கொண்டை கடலை, பெர்ரி வகை பழங்கள், தர்பூசணி வகை பழங்கள் சாப்பிடுவது பயன் அளிக்கும்.
அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவேண்டும். தசையில் பாதிப்பு ஏற்பட்டால் புரதம் வெளியேறி சிறுநீரகத்தை பாதிக்கக்கூடும். இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு ஆகியவற்றை பரிசோதித்து கட்டுக்குள் வைக்கவேண்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக வலி நிவாரணி மருந்துகள், வேறு எந்த உடல் பாதிப்புக்கான மருந்துகளையும் மருத்துவரின் ஆலோசனையின்றி தொடர்ந்து சாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்கும். மாற்று மருந்துகள் என்று கூறப்படுவற்றில் அதிக உலோகம் கலந்திருக்க வாய்ப்பு உள்ளது. போதிய ஆராய்ச்சி மற்றும் அங்கீகாரம் இல்லாமல் கொடுக்கப்படும் மருந்துகளை உண்பதை தவிர்ப்பது சிறுநீரகங்களை பாதுகாக்க உதவும்.

You'r reading கோடைக்காலத்தில் சிறுநீரகங்களை பாதுகாப்பது எப்படி? Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை