ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...

by SAM ASIR, Apr 25, 2021, 22:02 PM IST

திடீரென மரணம் நிகழ்வதற்கு மாரடைப்பைப் போன்ற இன்னொரு காரணம் ஹீட் ஸ்ட்ரோக் அல்லது சன் ஸ்ட்ரோக். வெப்ப தாக்குதல் என்று இதை நாம் புரிந்து கொள்ளலாம். அதிக வெப்பத்தின் காரணமாக உடல் உறுப்புகளை திடீரென்று செயலிழக்கச் செய்வதே ஹீட் ஸ்ட்ரோக்கின் ஆபத்து. நம் உடல் வெப்பநிலையை சரியான அளவில் காத்துக்கொள்வதற்கு மூளையில் ஹைப்போதலமாஸ் என்ற பகுதியில் தெர்மோஸ்டட் உள்ளது. வெளியே வெப்பம் அதிகரிக்கும்போது வியர்வையின் மூலமாக வெப்பத்தை வெளியேற்றியும், வெளியே குளிர் நிலவும்போது உடலின் வெப்பம் வெளியேறாமல் தடுத்தும், உடலின் உள்வெப்பநிலையை சீராக பராமரிப்பதே தெர்மோஸ்டட்டின் பணியாகும். நம் மூளையிலுள்ள தெர்மாஸ்டட் செயலிழந்து போகும் நிலையே வெப்ப தாக்குதல், ஹீட் ஸ்ட்ரோக் அல்லது சன் ஸ்ட்ரோக் என்று அழைக்கப்படுகிறது.

கோடைக்கால பாதிப்புகளில் மிகவும் ஆபத்தானது ஹீட் ஸ்ட்ரோக். ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு சிறு பயிறு என்னும் பச்சைப் பயிறு உதவுகிறது. இதன் அழற்சிக்கு எதிராக செயல்படும் இயல்பு (anti-inflammatory properties)ஹீட் ஸ்ட்ரோக், உடல் வெப்பநிலை அதிகரித்தல் மற்றும் அதிக தாகம் இவற்றை தடுக்கிறது. பச்சைப் பயிறு சூப் அருந்தினால் உடலில் நீர்ச்சத்து குறையாது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நிலையற்ற அணுக்களாகிய ஃப்ரீ ராடிகல்ஸால் உடலின் செல்களுக்கு சேதமுண்டாகாமல் பச்சைப் பயிறிலுள்ள ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் (ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள்)பாதுகாக்கின்றன.

சிறுபயிறில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள்:

ஒரு கப், அதாவது 200 கிராம் அவித்த சிறு பயிறில் 212 கலோரிகள், 0.8 கிராம் கொழுப்பு, 14.2 கிராம் புரதம் (புரோட்டீன்), 38.7 கிராம் கார்போஹைடிரேடு, 15.4 கிராம் நார்ச்சத்து, ஒரு நாளைக்குத் தேவையான ஃபோலேட் (பி9 வைட்டமின்)அளவில் 80 சதவீதம், தேவையான அளவில் 30 சதவீதம் மாங்கனீசு, 24 சதவீதம் மெக்னீசியம் மற்றும் 22 சதவீதம் வைட்டமின் பி1, 20 சதவீதம் பாஸ்பரஸ், 16 சதவீதம் இரும்புச் சத்து, 11 சதவீதம் துத்தநாகம் (ஸிங்க்) ஆகியவையும், பீனைலாலலின், லூஸின், ஐஸோலூஸின், வாலைன், லைஸின், ஆர்ஜினைன் உள்ளிட்ட அமினோ அமிலங்களும் உள்ளன.

நீரிழிவு பாதிப்பு

சிறு பயிறு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிக மெதுவாகவே அதிகரிக்கும். இரத்தத்தின் சர்க்கரையை அதிகரிக்கும் கிளைசெமிக் இன்டெக்ஸ் (ஜிஐ)38 என்ற அளவு கொண்டது. இதில் அதிகமாக காணப்படும் நார்ச்சத்து, மெக்னீசியம், புரதம் ஆகியவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கின்றன.

இரத்தக் கொதிப்பு

முதுமையில் பெரும்பான்மையோரை பாதிப்பது உயர் இரத்த அழுத்தம் என்னும் இரத்தக் கொதிப்பாகும். இது இதய நோய் வரக்கூடிய ஆபத்தையும் உருவாக்குகிறது. சிறு பயிறு சாப்பிடுவதால் உயர் இரத்த அழுத்தம் குறைகிறது. பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து அடங்கிய உணவான சிறுபயிறு, உயர் இரத்த அழுத்தம் ஏற்படக்கூடிய அபாயத்தை தடுக்கிறது.

கருவுற்ற பெண்கள்

கருவுற்ற தாய்மாருக்கு பி9 வைட்டமினாகிய ஃபோலேட் அவசியம். கர்ப்ப காலத்தில் ஃபோலேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, கருவிலுள்ள சிசுவின் வளர்ச்சிக்கு உதவும். ஒரு நாளைக்குத் தேவையான அளவில் 80 சதம் பி9 வைட்டமினை தரக்கூடிய ஆற்றல் சிறுபயிறுக்கு உள்ளது. இரும்புச் சத்து, புரதம் மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் அடங்கியிருப்பதால் இது கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவாகும்.

செரிமானம்

பச்சைப் பயிறில் உள்ள பெக்டின் என்னும் கரையும் நார்ச்சத்து, உணவினை செரிமான குழல் வழியாக கொண்டு செல்ல உதவுகிறது. வயிற்றிலுள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உதவும் ஸ்டார்ச்சும் இதில் உள்ளது. மற்ற பருப்பு வகைகளை விட எளிதாக ஜீரணமாகக்கூடியது பச்சைப் பயிறாகும்.

எடை குறைப்பு

பச்சைப் பயிறில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் இரண்டும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடாதபடி, நம்மை திருப்தியாக உணரச் செய்யக்கூடியவை. செல்களை மறு உருவாக்கம் செய்யவும் சேதத்தை சரி செய்யவும் புரதம் உதவுகிறது. ஆகவே, உடல் எடையை குறைக்க விரும்புவோர் பச்சைப் பயிறை சாப்பிடலாம்.

You'r reading ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது... Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை