கோவிட்-19 பெருந்தொற்று நாடு முழுவதையும் ஆக்கிரமித்துவேளையில் உடல் நலத்தைக் காத்துக்கொள்வதற்கு முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை கடைபிடிக்கவேண்டியது அவசியம். அவற்றுடன் சில பொருளாதார முன்னெச்சரிக்கைகளையும் செய்து கொள்வது நல்லது. கொரோனா அச்சுறுத்தலை பாதுகாப்பாக கடந்துசெல்வதற்கு இந்த வழிகாட்டுதல்கள் உதவும். நிச்சயமற்ற இந்தச் சூழலில் மேலும் குழப்பங்களை தவிர்க்க இவற்றைக் கடைபிடிப்போம்.
முடிந்த அளவுக்கு ரூபாய் காகிதங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதன் மூலம் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. இணைய பரிவர்த்தனையை (இன்டர்நெட் பேங்கிங்) பயன்படுத்தவும். வீட்டை விட்டு வெளியே வருவதை முடிந்த அளவு தவிர்க்கவும்.
பெருந்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு மோசடி பேர்வழிகள் ஏமாற்ற முயற்சிப்பர். தனிப்பட்ட மற்றும் வங்கி கணக்கு விவரங்களை கேட்டு வரும் தொலைபேசிஅழைப்புகள், மின்னஞ்சல்கள், அறிமுகமில்லாத இணைப்புகள் (லிங்க்), கூகுள் டாக்ஸ் ஆகியவற்றுக்குப் பதில் தர வேண்டாம். நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி, ரிசர்வ் வங்கி, வருமானவரி துறை மற்றும் தடுப்பூசி மையங்களிலிருந்து அழைப்பதாகவும் மோசடிப் பேர்வழிகள் கூறக்கூடும்.
தேவைப்பட்டால் வங்கி கணக்கில் இருப்பில் உள்ள தொகையை செலவுக்கு பயன்படுத்த வசதியாக உங்கள் வங்கி கணக்குகள் அனைத்தையும் இணைத்துக் கொள்ளவும்.
அவசர தேவைக்கு பயன்படுமாறு உங்கள் குடும்பத்தினருக்கு கூடுதல் இணைப்பான (add-on)டெபிட் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் போதுமான அளவுக்கு இருக்கிறதா? புதுப்பிக்கப்பட்டுள்ளதா? என்பதை சரி பார்க்கவும். தேவைப்பட்டால் கூடுதல் தொகை (top-up)சேர்க்கவும்.
காப்பீடு பற்றிய அனைத்து விவரங்களையும் காப்பீட்டு அலுவலகத்தின் வாடிக்கையாளர் உதவி மைய எண்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். அவ்விவரங்களை உங்கள் குடும்பத்தினரும் அறிய தாருங்கள்.
உங்கள் எல்லா சொத்துகளுக்கும் உரிய வாரிசுதாரர் (nominee)பதியப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் செய்துள்ள முதலீடுகளைப் பற்றி குடும்பத்தினருக்கு தெரிவியுங்கள்.
6 மாதங்களுக்குப் போதுமான தொகையை அவசர செலவுக்காக வைத்துக்கொள்ளுங்கள். அவசரமாக தொகை தேவைப்பட்டால் நிரந்தர வைப்புத் தொகை (FD)மேல் அல்லது உங்கள் ஊதிய கணக்கு இவற்றின்மேல் overdraft முறையில் பணம் பெறலாம். ஷேர்கள், மியூச்சுவல் ஃபண்ட் இவற்றின் பேரில் கடன் பெறலாம்.