தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜூமா மீதுள்ள ஊழல் குறித்த விசாரணையில் இந்தியாவைச் சேர்ந்த பரோடா வங்கியும் சிக்கி உள்ளது.
தென்னாப்பிரிக்காவில் பெரும் தொழிலதிபர்களான குப்தா சகோதரர்களும் ஜூமாவும் சேர்ந்து பல்வேறு ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, குப்தா சகோதரர்களை விசாரிக்க போலீஸ் திட்டமிட்ட போது, அவர்கள் இருவருத் தலைமறைவாயினர்.
இந்நிலையில், அவர்கள் செய்த பணப் பரிவர்த்தனைகள் குறித்த ஆவணங்களை கைப்பற்றுவதற்காக நேற்று ஜோகன்னஸ்பர்க் மற்றும் டர்பனில் இருக்கும் பரோடா வங்கியில் ரெய்டு நடத்தினர் காவல் துறையினர்.
இந்த ரெய்டில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பரோடா வங்கி நிர்வாகமும் இந்த சோதனைக்கு போலீஸுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாம்.
இந்த விவகாரம் குறித்து பரோடா வங்கி, ‘இந்த ரெய்டு பரோடா வங்கியின் மீது நடத்தப்பட்ட ஒன்றல்ல. குப்தா சகோதரர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மட்டுமே இச்சோதனை நடந்தது’ என்று விளக்கம் அளித்துள்ளது.