'2GUD' என்ற இணையதளத்தை தனக்கென்று ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது மொபைல் போன்களில் மட்டும் இத்தளம் செயல்படும். விரைவில் இது கணினியில் இயங்கத்தக்கதாகவும், செயலியாகவும் பயன்பாட்டுக்கு வரும்.
இந்தியாவில் ஃப்ளிப்கார்ட் நிறுவனம், ’இபே' மின்னணு வர்த்தக இணையதளத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தது. ஃப்ளிப்கார்ட்டை வால்மார்ட் நிறுவனம் வாங்கியது. அதள்பின்னர் 'இபே' தளத்துடனான ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தக உறவு முற்றுப்பெற்றது.
தனக்கென புதுப்பிக்கப்பட்ட '2GUD' மொபைல் தளத்தை ஃப்ளிப்கார்ட் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.முன்பு 'இபே' நிறுவனத்திற்காக பணியாற்றியவர்களுள் பலர் ஃப்ளிப்கார்ட்டின் 'டூகுட்' இணையதளத்துடன் இணைந்துள்ளனர்.
தற்போது ஸ்மார்ட் போன்கள், மடிக்கணினிகள் (லேப் டாப்), டேப்லெட் மற்றும் எலெக்ட்ரானிக் துணை பொருட்களை மட்டுமே இத்தளத்தின் மூலம் வாங்க முடியும். விரைவில் பெரிய உபகரணங்களையும் வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். பொருட்களுக்கான தரச்சான்றுபடி, மற்ற இடங்களில் வாங்குவதற்கும் இதன் மூலம் வாங்குவதற்கும் விலையில் 50 முதல் 80 சதவீதம் வேறுபாடு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வாங்கப்படும் பொருட்களுக்கு மூன்று முதல் பன்னிரண்டு மாதங்கள் உத்தரவாதமும் (வாரண்டி) கிடைக்கும்.
இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களை குறி வைத்து 'டூகுட்' வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃப்ளிப்கார்ட் நிறுவனம், இதே வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு Liv.ai என்ற செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் குரலுணர் தளத்தையும் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
"புதுப்பிக்கப்பட்ட இத்தளம் இந்தியாவின் உத்வேகம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கானது," என்று ஃப்ளிப்கார்ட்டின் தலைமை செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
'இபே'வுடன் இணைந்து செயல்பட்ட அனுபவத்தை கொண்டு ஃப்ளிப்கார்ட், 'டூகுட்' மொபைல் தளத்தை உருவாக்கியிருக்க, 'இபே' நிறுவனம் தாங்களும் இந்திய வாடிக்கையாளர்களுக்கென புதுப்பிக்கப்பட்ட ஒரு மின்னணு வர்த்தக இணைய தளத்தை அறிமுகம் செய்வது குறித்து யோசித்து வருகிறது.