நாடெங்கும் உள்ள தனது கிளைகளுள் ஏறக்குறைய 1,300 கிளைகளின் பெயர்களையும் அவற்றுக்கான பண பரிவர்த்தனை இந்தியன் பைனான்சியல் சிஸ்டம் கோடு (Indian Financial System Code - IFSC) எண்களையும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) மாற்றியுள்ளது.
வைப்புநிதி, வாடிக்கையாளர்கள் மற்றும் கிளைகளை பொறுத்தவரை எஸ்பிஐ என்னும் பாரத ஸ்டேட் வங்கியே நாட்டில் பெரியதாகும். உலக அளவில் வங்கிகளுக்கான சொத்து மதிப்பில் இது 53வது இடத்தை வகிக்கிறது. 2018 ஜூன் 30ம் தேதி கணக்குப்படி இதன் சொத்து மதிப்பு 33.45 லட்சம் கோடியாகும்.
துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா இவையும் பாரதிய மகிளா வங்கியும் 2017 ஏப்ரல் 1ம் தேதி முதல் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டு விட்டன.
இந்த இணைப்பின் காரணமாக பாரத ஸ்டேட் வங்கி 1,805 கிளைகளை குறைத்ததுடன் 244 நிர்வாக அலுவலகங்களை மாற்றியமைத்துள்ளது. இணைப்புக்கு முன் இரண்டு லட்சமாக இருந்த எஸ்பிஐ வங்கியின் பணியாளர் எண்ணிக்கையுடன் புதிதாக 71,000 பணியாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் எஸ்பிஐக்கு நாடு முழுவதும் 22,428 கிளைகள் உள்ளன.
துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கி இணைப்பின் காரணமாக தற்போது எஸ்பிஐ 1,295 கிளைகளின் பெயரையும் அவற்றுக்கான பண பரிவர்த்தனை (IFSC) எண்களையும் மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.