கொல்கத்தா: வாகன சோதனையினபோது ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிவந்த நபரை போலீசார் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற திட்டம் அமலில் உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாவிட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுகிறது.
மேலும், சமூக சேவர்கர்களையும் போலீஸ் பணியில் ஈடுபடுத்தி, அவர்களுக்கும் போலீசுக்கான அதிகாரம் வழங்கி ஹெல்மெட் அணிந்துள்ளனரா என்று சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், போலீசில் பணியாற்றும் 2 பேர் வடக்கு பாரகன் மாவட்டம் மத்திய மக்ராம் நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சவுமன் தேப்நாத் என்பவர் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை மடக்கிப்பிடித்த போலீசார் அபராதம் விதித்தனர். ஆனால், சவுமன் அபராதம் செலுத்த மறுத்ததாக தெரிகிறது. இதனால், போலீஸ் பணியில் இருந்த இருவரும் சவுமனை பலமாக தாக்கினர்.
இதில், சவுமன் கேப்நாத் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் சவுமனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சவுமனை பரிசோதித்த டாக்டர்கள் சவுமன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், பொதுமக்கள் ஒன்றுதிரண்டு போலீஸ் பணியில் இருந்த இருவரையும் சுற்றி வளைக்க முயன்றனர். அதற்குள், ஒரு கழிவறைக்குள் பதுங்கிய இருவரும் பின்னர் தப்பினர்.
இந்த சம்பவத்தை அடுத்து உள்ளூர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினார்கள். தேசிய நெஞ்சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர். மேலும், போலீஸ் பணியில் ஈடுபட்டிருக்கும் சமூக பணியாளர்கள் அபராதம் விதிப்பது போக்குவரத்து விதிக்கு மாறானது என்றும் அதற்கான ரசீதும் தருவதில்லை என்றும் குற்றம்சாட்டினர்.