கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
கர்நாடக காங்கிரசில் முக்கியமானவர் டி.கே.சிவக்குமார். ஏற்கனவே சித்தராமையா முதல்வராக இருந்த போது அமைச்சராக இருந்தார். சிவக்குமார் பெரும் பணக்காரர். குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசின் அகமது படேலை தோற்கடிப்பதற்கு பாஜக முயன்ற போது, அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பெங்களூருவுக்கு அழைத்து வந்து தனது ரிசார்ட்டில் தங்க வைத்து, அகமது படேல் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தவர்.
சமீபத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் தீவிரம் காட்டிய போது, அதை முறியடிக்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டவரும் இதே சிவக்குமார் தான். ஆனால் அவருடைய முயற்சிகள் பலிக்காமல், பாஜக ஆட்சிக்கு வந்து விட்டது. ஆனாலும் டி.கே.சிவக்குமாரை பழி தீர்க்க, அவர் மீது மத்திய அரசு குறி வைத்து வந்தது. ஏற்கனவே குஜராத் ராஜ்யசபா தேர்தலின் போதே சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடி ரெய்டுகளை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சட்டவிரோத பணபரிமாற்றம் செய்ததாக குற்றம்சாட்டி, சிவக்குமாருக்கு அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பினர். இதற்கு பெங்களூரு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அதன்பின், சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டி.கே.சிவக்குமாரிடம் கடந்த வாரம், அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
அமலாக்கத் துறையின் இந்த அதிரடி நடவடிக்கை டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று அவர் வீட்டில் குவிந்த ஆதரவாளர்களை சமாதானப்படுத்திய சிவக்குமார் பேசுகையில், நான் ஒன்றும் யாருடைய பணத்தையும் அபகரிக்கவில்லை. கற்பழிப்பு போன்ற மாபாதக செயல்கள் எதுவும் செய்து விடவில்லை. அரசியல் ரீதியாக பழி வாங்குகிறது பாஜக அரசு. இதனை சட்டப்படி எதிர்கொள்வேன் என்று கூறினார்.
மேலும் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், என்னை துன்புறுத்த பார்க்கிறார்கள். என்னை கஷ்டப்படுத்துவதால் ஏற்படும் சந்தோஷத்தை அவர்கள் அனுபவித்து விட்டு போகட்டும். ஆனாலும் நான் சட்டத்தை மதிப்பவன். அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்வேன். உச்ச நீதிமன்றத்தில் உரிய தீர்வு கிடைக்காவிட்டால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பேன் என்று தெரிவித்தார்.
இதன்பின்னர், அமலாக்கத் துறையினர் நேற்று(செப்.3) அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தி விட்டு இரவில் கைது செய்தனர். அவர் போலி கம்பெனிகள் நடத்தி, ஹவாலா பரிமாற்றங்களை மேற்கொண்டிருக்கிறார் என்று அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து வருமானவரித் துறை வழக்கிலும் சிவக்குமார் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
கைதாகும் போது சிவக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், கடைசியாக என்னை கைது செய்வதில் வெற்றியடைந்த பாஜக நண்பர்களுக்கு பாராட்டுகள். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத் துறை மற்றும் வருமானவரித் துறையினர் என் மீது வழக்கு தொடுத்துள்ளனர். இதை சட்டரீதியாக சந்திப்பேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.